இலங்கை

யாழ்.வயாவிளானில் இரண்டாவது தடவையாக காணி மீட்புப் போராட்டம்;  சிறீதரன், சாணக்கியன், சுமந்திரன், சுரேஷ் பங்கேற்பு!

யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 36 வ்ருடங்களாக விடுவிக்கப்படாதுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வயாவிளான் மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த பகுதி மக்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10.30 மணி தொடக்கம் பிற்பகல்-12.30 மணி வரை யாழ்ப்பாணம் வயாவிளான் சந்தியில் வயாவிளான் மண் மீட்புக்கான கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையாக முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இடம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பல பகுதிகளிலும் வாழும் வயாவிளான் மக்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இ.சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ச.சுகிர்தன், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் ஈபிடிபி கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது காணி விடுவிப்புத் தொடர்பான மக்களின் பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பதில்கள் வழங்கினர்.

கவனயீர்ப்புப் போராட்டத்தின் நிறைவில் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர். ஜெனரல் யகம்பத்திற்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் இராணுவ அதிகாரியொருவரிடம் வயாவிளான் மீள்குடியேற்ற அமைப்பினரால் நேரடியாகக் கையளிக்கப்பட்டது.

வயாவிளான் மண் மீட்புக்கான பாரிய காணி மீட்புப் போராட்டம் யாழ்.வயாவிளான் சந்தியில் இந்த மாதம்-02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தது. இந் நிலையில் நேற்று இரண்டாவது தடவையாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வயாவிளான் மண் மீட்புக்கான காணி விடுவிப்புப் போராட்டத்தின் மூன்றாவது போராட்டம் அடுத்த மாதம்-06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை இடம்பெறுமெனவும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button