உலகம்

பயங்கரவாதி ஹபிஸ் சயீதுக்கு அழைப்பாணை: பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு

2025-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்க தலைவர் ஹபிஸ் சயீதுக்கு Hafiz Saeed நீதிமன்ற அழைப்பாணையை (Summons) ராஜதந்திர வழிகள் மூலம் இஸ்லாமாபாத்திற்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றம்சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு கருத்தை முன்வைக்க போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பதைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய இந்த நடவடிக்கை மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

அடுத்த கட்டமாக அவரை ‘பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி’ (Proclaimed Offender – PO) ஆக அறிவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

‘பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ சட்டத்தின் பிரிவு 356-இன் படி, பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி ஆஜராகாத நிலையிலும் அவருக்கு எதிரான விசாரணை மற்றும் தீர்ப்பை வழங்க இந்தியச் சட்டத்தில் இடமுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத் தலமான பஹல்காமில் 27 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் சதித்திட்டம் தொடர்பான வழக்கில், ஹபிஸ் சயீதை தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றவாளியாகச் சேர்த்துள்ளது.

ஜம்முவில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றம் அவருக்கு எதிராக ஏற்கனவே பிணையில் வர முடியாத பிடியாணை (Non-Bailable Warrant) பிறப்பித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் எதுவும் இல்லை.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனரான ஹபிஸ் சயீதை சர்வதேசப் பயங்கரவாதியாக இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்கனவே அறிவித்துள்ளன. மேலும் அவருக்கு எதிராக இன்டர்போல் ‘ரெட் கார்னர்’ நோட்டீஸும் நிலுவையில் உள்ளது.

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்த வழக்கில் தண்டனை பெற்ற 76 வயதான சயீத், லாகூரில் காவலில் இருப்பதாகப் பாகிஸ்தான் கூறி வருகிறது.

இருப்பினும், சர்வதேச நடவடிக்கைகளில் இருந்து சயீத் போன்ற பயங்கரவாதிகளைப் பாதுகாக்கப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகள் நாடகமாடுவதாக இந்திய முகமைகள் நீண்டகாலமாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு இந்த அழைப்பாணை அனுப்பப்படவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button