வரலாற்றிலேயே மிகக் கடுமையான எல் நினோ: பிரித்தானிய வானிலை மையம் எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு, மனித நினைவில் வாழும் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதாக இருக்கக்கூடும் எனப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் (UK Met Office) எச்சரித்துள்ளது.
இயற்கையாக நிகழும் இந்த சக்திவாய்ந்த பருவநிலை நிகழ்வு, உலகளாவிய வெப்பநிலையை உயர்த்துவதுடன் தீவிர வானிலை மாற்றங்களின் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யக்கூடியது.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் இதுவும் சேரும்போது, வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் நிறைந்த ஆண்டாக 2027 பதிவாவதற்கு “மிக அதிக சாத்தியக்கூறுகள்” உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் வானிலை அமைப்புகள் ஏற்கனவே இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இந்தியாவில் சராசரியை விடக் குறைவான தென்மேற்குப் பருவமழை மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் புயல்களின் தாக்கம் குறைந்து காணப்படுவது ஆகியவை இதன் அறிகுறிகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
பிரித்தானியாவில் இதனால் அதிக மழை மற்றும் புயல் நிறைந்த இலையுதிர்காலம் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.
இது குறித்துப் பிரித்தானியா (UK Met Office) அமைப்பின் நீண்டகால முன்னறிவிப்புப் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஆடம் ஸ்கே ப் (Prof Adam Scaife) தெரிவிக்கையில்,
“இதுவரை இல்லாத ஒரு தீவிரமான நிகழ்வை நாம் எதிர்கொள்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
எங்கள் வானிலை முன்னறிவிப்புகளில் இவ்வளவு தீவிரமான எல் நினோ சமிக்ஞையை நான் இதுவரை கண்டதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
எல் நினோ என்றால் என்ன?
எல் நினோ என்பது 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை இயல்பாக நிகழும் ஒரு வானிலை மாற்றமாகும்.
இது சுமார் ஒரு வருடம் வரை நீடிக்கும்.
இக்காலக்கட்டத்தில், பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்காக வீசும் வர்த்தகக் காற்றுகள் (Trade winds) பலவீனமடைவதால் அல்லது திசைமாறுவதால், வெதுவெதுப்பான கடல் நீர் கிழக்கு நோக்கிப் பரவுகிறது.
இதனால் கடலிலிருந்து அதிக வெப்பம் வளிமண்டலத்திற்கு வெளியாகி உலகளாவிய வெப்பநிலையை உயர்த்துவதுடன், மழைப்பொழிவு அமைப்புகளையும் மாற்றியமைக்கிறது.
பசிபிக் பெருங்கடலின் முக்கியப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 0.5°C அதிகரிக்கும் போது விஞ்ஞானிகள் அதை ‘எல் நினோ’ என அறிவிக்கின்றனர். ஆனால், தற்போதைய அளவீடுகள் வழக்கத்தை விட 2°C க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதைக் காட்டுகின்றன.
![]()