இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால்  வாக்குமூலம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகளவில் பங்கேற்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

ஒவ்வொரு குழுவிலும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வயது, காணாமல் போன காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்த பெற்றோர்களாகவும் உறவினர்களாகவும் காணப்பட்டனர்.

பல வருடங்களாக தமது பிள்ளைகள் மற்றும் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் அவர்கள், தமக்கு பணம் அல்லது இழப்பீடு தேவையில்லை என்றும், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்பதே தங்களது ஒரே கோரிக்கையாக உள்ளதாகவும் உருக்கமாக தெரிவித்தனர்.

பல வருடங்களாக வந்து பதிவு செய்கிறோம், ஆனால் எங்களுக்கு இன்னும் எமது பிள்ளைகள் பற்றிய பதில் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

இப்போது எஞ்சியிருப்பது நாங்கள் மட்டுமே. நாங்களும் இல்லாமல் போனால், எங்களுடைய பிள்ளைகளின் கதைகளும் முடிந்துவிடும் என்ற அவர்களின் கண்ணீர் கலந்த வார்த்தைகள், பல ஆண்டுகளாக நீடித்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வலியையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தின.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button