உலகம்

மகாராஷ்டிராவில் பெரும் நிதி முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய ‘லட்கி பகின்’ திட்டம்

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபா வழங்கும் (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) திட்டம், கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் நிதிச் சுதந்திரத்திற்கு முக்கிய காரணியாக அமைந்த போதிலும், தற்போது கடும் நிதித் தணிக்கை மற்றும் முறைகேடு புகார்களுக்கு உள்ளாகியுள்ளது.

2024 மாநிலத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன் ஆளும் ‘மகாஜுதி’ (Mahayuti) கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், அப்போதைய தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய அரசியல் பலமாகப் பார்க்கப்பட்டது.

இந்திய தேசியத் தணிக்கையாளர் (Auditor) வெளியிட்ட தகவலின்படி, மகாராஷ்டிர பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, இத்திட்டத்தின் முதல் நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 3,541 கோடி ரூபா மேலதிகமாகச் செலவிட்டு, மொத்தம் ரூ. 33,237 கோடியைச் செலவழித்துள்ளது.

அரசு மேற்கொண்ட சரிபார்ப்பு நடவடிக்கையின் (e-KYC) மூலம், தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்ட சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதில் சுமார் 62 லட்சம் பேர் தங்களது அடையாளச் சரிபார்ப்பை (e-KYC) முடிக்காதவர்கள்.

விதிமுறைகளை மீறி 29,000 ஆண்களும், 8,000 அரசு ஊழியர்களும் இத்திட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகப் பணம் பெற்றுள்ளது அரசு தரவு மூலம் தெரியவந்துள்ளது.

உடனடித் தேவை ஏதுமின்றி, கடந்த நிதியாண்டின் கடைசி 3 மாதங்களில் ரூ. 15,586 கோடியைச் சிறப்பு வங்கிக் கணக்குகளுக்கு அரசு மாற்றியதாகத் தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

தகுதியற்றவர்களிடம் இருந்து பணத்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் பெண்கள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள போதிலும், இத்தகைய உடனடிப் பணப்பரிமாற்றத் திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் ஏற்படுத்தும் நிதியியல் பாதிப்புகள் குறித்த விவாதத்தை இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button