இலங்கை

மரண தண்டனையை ஏற்க முடியாது.! கார்டினல் ரஞ்சித் ஆண்டகையின் அதிரடி நிலைப்பாடு

கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளின்படி மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கடமைகளை முறையாக நிறைவேற்றத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267ஆவது பத்தியின்படி, மரண தண்டனை மனித கண்ணியத்தை மீறுவதாகக் கருதப்படுவதாகவும்,

எனவே எந்தவொரு மரண தண்டனையையும் திருச்சபையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை மீது தாம் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அல்லது அது தொடர்பான விவாதங்களில் தலையிட தாம் விரும்பவில்லை என்றும் கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் கொழும்பு பேராயர் இல்லம் தொடர்ந்து இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்த முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதே தமது முக்கிய எதிர்பார்ப்பு எனவும் பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் சட்டத்திற்கு அமைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதையும் கொழும்பு பேராயர் இல்லம் வலியுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button