சீனர்களால் நாட்டுக்கு ஆபத்து; கொழும்புத் துறைமுக நகர ஒப்பந்தத்தை உடன் நீக்கவும்

நாட்டில் பல மோசடி மற்றும் இணையவழிக் குற்றங்களில் சீனர்கள் ஈடுபடுகிறார்கள்.இதனால் பல சீனர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அத்துடன் சீனாவினால் உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகர கருத்திட்டத்தின் நோக்கம் வெற்றி பெறவில்லை. எனவே கொழும்பு துறைமுக நகரத்தின் 99 வருடகால ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளை 27/2இல் விசேட கூற்றை முன்வைத்தே இதனை வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
கொழும்பு துறைமுக நகரம் 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டையும் 80, 000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளையும் கொண்டு வரும் என்று உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும், தொழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இவலயத்தில் 116 ஹெக்டேயர் நிலம் சீனாவுக்கு சொந்தமான துறைமுக நகரம் (பிரைவட் ) லிமிடெட் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது, அந்நிறுவனமே அந்த நிலத்தை சந்தைப்படுத்தி வருமானத்தை வைத்துக்கொள்கிறது.
கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட 116 ஹெக்டேயர் நிலத்தில், இதுவரை எவ்வளவு நிலம் உட்குத்தகைக்கு விடப்பட்டுள்ளது அல்லது வேறு வழியில் மாற்றப்பட்டுள்ளது? அரசாங்கம் இந்த முதலீட்டாளர்களின் பட்டியல், அவர்கள் சார்ந்த நாடு மற்றும் ஒவ்வொரு குத்தகையின் காலம் ஆகியவற்றைக் கொண்ட பட்டியலைச் சமர்ப்பிக்குமா? மேலும்,மொத்த நிலத்தில் எவ்வளவு விகிதம் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது?
வலயத்தில் நிலத்தை சந்தைப்படுத்தியதன் மூலம் அந்த நிறுவனம் ஈட்டிய வருமானத்துடன் ஒப்பிடும்போது, துறைமுக நகரத்திலிருந்து அரசாங்கம் இதுவரை ஈட்டிய வருமானம் எவ்வளவு? கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும், துறைமுக நகரத்திற்குள்ளும் மற்றும் முதலீட்டு சபை மற்றும் பிற வழிகள் மூலமாகவும் பெறப்பட்ட உண்மையான வெளிநாட்டு முதலீடு அமெரிக்க டொலர்களில் எவ்வளவு?
துறைமுக நகர ஆணைக்குழுவின் அதிகாரிகள் 1 மில்லியன் முதல் 2 மில்லியன் வரையில் மாதச் சம்பளம் பெறுகிறார்கள்.இந்த விபரங்களை கோரினாலும் வழங்குவதில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக விண்ணப்பித்தாலும் தகவல் கிடைப்பதில்லை. ஜனாதிபதி முதல் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பகிரங்கப்படுத்தியுள்ள நிலையில், கொழும்பு துறைமுக நகரம் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் சம்பள விபரங்களை ஏன் வெளிப்படுத்த முடியாது?
இதேவேளை நாட்டில் பல மோசடி மற்றும் இணையவழிக் குற்றங்களில் சீனர்கள் ஈடுபடுகிறார்கள்.இதனால் பல சீனர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அத்துடன் சீனாவினால் உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகர கருத்திட்டத்தின் நோக்கம் வெற்றி பெறவில்லை. எனவே கொழும்பு துறைமுக நகரத்தின் 99 வருடகால ஒப்பந்தத்தை இரத்து செய்து அந்த கருத்திட்டத்தை இலங்கைக்கு பயனுடையதாக மாற்றியமைக்க வேண்டும் என்றார்.
![]()