இலங்கை

மெகசின் மோதலில் உயிரிழந்த கைதியின் பின்னணி

பொரள்ளை புதிய மெகசின் சிறைச்சாலையில் (06) நள்ளிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

வெளியில் இருந்து சிலர் சிறைச்சாலை வளாகத்திற்குள் எறிந்த ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்றைச் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்ற சம்பவத்தை மையமாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

அச்சமயத்தில் ஒரு குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன், பின்னர் சுமார் 45 கைதிகள் சிறைக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் “கொஸ்மல்லி” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் உதவியாளர்கள் எனக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைதியின்மையில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயில் வழியாக வெளியேற முயன்றபோது, நிலமையைக் கட்டுப்படுத்தச் சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாகப் போராடியுள்ளனர்.

இரு குழுக்களுக்குமிடையே ஏற்பட்ட இந்த மோதலின் போதே ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம, கட்டுவன பகுதியைச் சேர்ந்த முகமது அஸ்மான் ஷெரிப்டீன் (35 வயது) என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இவர் கல்கிஸை வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைப் கொலை மற்றும் நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டைப் கொலை உட்படப் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார்.

மேலும், “ஹோமாகம ஹந்தயா” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கூலிப்படை துப்பாக்கிதாரியாக பணியாற்றியதாகக் கூறப்படும் இவருக்கு எதிராகக் காலி, அம்பாறை, நீர்கொழும்பு, ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அத்துடன், கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலைச் சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபராகவும் இவர் ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 10 கைதிகள் சிகிச்சைக்காகச் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மோதலை வழிநடத்தியதாகக் கருதப்படும் 9 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button