உலகம்

காட்டுத் தீயைக் கட்டுபடுத்த ஐரோப்பாவில் தீயணைப்பு ஹெலிகொப்டர்களை களமிறக்கும் ஆஸ்திரேலியா

பிரான்ஸின் போர்டோக்ஸ் (Bordeaux) நகரின் மேற்குப் பகுதியில் உள்ள 42,000 ஹெக்டேயர்களைத் தீக்கிரையாக்கிய காட்டுத்தீ காரணமாக, இந்த வாரத்தில் சுமார் 224,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

‘எல் நினோ’ (El Niño) காரணியால் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் வெப்பம் காரணமாக, அட்லாண்டிக் கடற்கரை முதல் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி வரையிலான ஐரோப்பிய நாடுகளில் கடுமையான காட்டுத்தீ பரவி வருகின்றது.

பிரான்ஸ் தவிர பிரித்தானியா (UK), ஸ்பெயின், ஜெர்மனி, கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றன.

வாரத்தின் பிற்பகுதியில் பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான காற்று வீசியதால், வெளியேற்றப்பட்ட 2,24,000 பேரில் மூன்றில் இரண்டு பங்கினர் மீண்டும் வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், நிலப்பரப்பில் பல இடங்களில் இன்னும் தணல் தணிந்தபாடில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரெஞ்சு தீயணைப்பு வீரர்களுக்கு ஆதரவாக வான்வழித் தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் சிறப்புக் குழுக்களை அனுப்பவுள்ளதாக அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

11,300 லீற்றர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியுடன் கூடிய CH-47D சினூக் ஹெலிகொப்டர் (Chinook helicopter) மற்றும் பெல் 412 (Bell 412) உளவு விமானம் ஆகியவை பிரான்ஸுக்கு அனுப்பப்படவுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் ஊரகத் தீயணைப்புப் படையின் (NSW Rural Fire Service) 24 வான்வழி மற்றும் தரைவழி பணியாளர்களும் இதனுடன் செல்லவுள்ளனர்.

பிரான்ஸ் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த உதவி வழங்கப்படுவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button