இலங்கை

அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் சதி!; யாழில் போராட்டக்காரர்கள் சீற்றம்

தமிழ் மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, காணிகளை இழந்து தவிக்கும் மற்றும் எக்காலத்திலும் நஷ்ட ஈடு கோராத மக்களுக்கே பிரத்தியேகமாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு அழைக்கப்படும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் சம்மதத்தைப் பெற்று, அவர்களின் பூர்வீகக் காணிகளை நிரந்தரமாகக் கபளீகரம் செய்யவே இன்றைய அரசும் அதன் அதிகாரிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்று அக்குழு எச்சரித்துள்ளது.

இராணுவப் பிடிக்குள் இருக்கும் தமது சொந்த நிலங்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் தொடர்ந்து 15 வாரங்களாகத் தொடர் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் இந்த நியாயமான போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி வேலைகளிலேயே அரசு இறங்கியுள்ளது.

எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடினால் மட்டுமே எமது காணி நிலங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button