இந்தியா

தவெகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு!

த.வெ.க.வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். அ.தி.மு.க.வை விட்டு வெளியேறிய நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் வழியில் அவரும் த.வெ.க.வில் சென்று இணைவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அவருடைய மகன் ரவீந்திரநாத்தின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது.

ஆனால், சட்டசபை தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் பக்கம் இழுத்தது. சட்டசபை தேர்தலிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில், த.வெ.க. ஆட்சி அமைத்ததால், தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டியதாகிவிட்டது.

தி.மு.க.வில் கடந்த பிப்ரவரி மாதமே ஓ.பன்னீர்செல்வம் இணைந்த நிலையில், இதுவரை அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. தேர்தலில் தி.மு.க.வும் தோல்வி அடைந்ததால், அடுத்து என்ன செய்வது என்று ஓ.பன்னீர்செல்வம் யோசித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், த.வெ.க.வில் சென்று இணைவதே சிறப்பு என்று ரவீந்திரநாத் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, த.வெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.

அமைச்சர்கள் இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கூற, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், தென்மாவட்டங்களில்தான் த.வெ.க. வலுகுறைந்து காணப்படுகிறது.

அதற்கு, முக்கிய அரசியல் முகம் அங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, அந்தக் குறையை ஓ.பன்னீர்செல்வம் மூலம் தீர்த்துக்கொள்வதுடன், கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்று த.வெ.க. தலைமை கருதுகிறது.

முன்னாள் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால், த.வெ.க.வில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விரைவில், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button