இலங்கை

பேராசிரியர் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிரான இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக பிறப்பித்த இடைக்கால கட்டளையை நீடித்து உத்தரவிட்ட பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், இரு தரப்புக்களின் எழுத்து மூலமான சமர்ப்பணத்திற்காக வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 11ம் திகதிக்கு ஒத்திவைத்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர்

என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரண்டு எதிர் மனுதாரர்கள் நேரில் நீதிமன்றத்தில் ஆஜரானதுடன் ஏனையோர் சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகினர். இதேவேளை எதிர்மனுதாரர்களில் ஒருவரான யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் நேரில் ஆஜராகாத நிலையில் அடுத்த வழக்கு தவணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என நீதிவானால் உத்தரவிடப்பட்டது.

மேலும் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் மற்றும் பதிவுகள் இதுவரை எதிர் மனுதாரர்களால் அகற்றப்படவில்லை என்ற விடயம் மனுதாரரின் சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அது தொடர்பாக உடனடியாக கவனத்தில் எடுக்குமாறு நீதிவானால் எதிர் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன்போது எதிர் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன் தமது எழுத்து மூலமான சமர்ப்பணத்தை சமர்பிக்க கால அவகாசம் கோரினர்.

வழக்கை விசாரித்த நீதிவான் இரு தரப்புக்களின் எழுத்து மூலமான சமர்ப்பணத்திற்காக வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார். எதிர் மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button