பலதும் பத்தும்

மீன் வாங்கும் போது இந்த விஷயத்தை கண்டிப்பா கவனிங்க!

பொதுவாக சிக்கன், மட்டன், இறால் போல பொதுவானது இல்லை மீன்கள். ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும். எது எந்த மீன் என அடையாளம் கண்டுபிடிப்பதே பலருக்கும் சிரமமாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தாண்டி, மீன்களை வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்டிய விஷயங்கள் என சில விஷயங்கள் உள்ளன.

கீழ்வரும் அந்த 5 விஷயங்களை, நீங்களும் மீன் வாங்க செல்லும் போது கவனித்துப் பாருங்கள். இவை சரியாக இருந்தால், நீங்கள் வாங்கும் மீன் எந்த ரகமாக இருந்தாலும் பயப்படாமல் வாங்குங்கள்.

1) முதலில், மீனின் வாசனையை பாருங்கள். புதிதாக பிடிக்கப்பட்ட மீன்கள் என்றால், கடல் மணமோ ஆற்றின் மணமோ அதில் இருக்கும். அதேபோல அமோனியா வாசனையோ, புளித்தது போன்ற வாசனையோ இருந்தால் அது பழைய மீனாகவோ அல்லது பதப்படுத்தப்பட்ட மீனாகவோ இருக்கக்கூடும். அவற்றை தவிர்ப்பதே நல்லது.

2) அடுத்தது, மீனின் கண்களை பாருங்கள். அவை பிரகாசமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். ஒருவேளை அவை மங்கலாகவோ, குழி விழுந்தோ காணப்பட்டால் அந்த மீன்களை தவிர்த்துவிடுங்கள்.

3) நீங்கள் வாங்கும் மீன், அதிக நேரம் ஐஸ் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தால், அந்த ஐஸ் பாக்ஸ் சுத்தமானதாக இருக்கிறதா என்பதை பாருங்கள். இல்லையெனில், அதன் மூலமாக கூட உங்களுக்கு தொற்றுப் பிரச்சனைகள் வரலாம். மட்டுமில்லாமல் சுத்தமான ஐஸ்களுக்கு மத்தியில் வைக்கப்படும் மீன்கள், நீண்டநேரம் புத்துணர்வோடு இருப்பதுடன், அதன் தரமும் சுவையும் பாதுகாக்கப்படும்.

4) சிலர் கடைகளுக்கு சென்று மீன் வாங்குவதற்கு பதிலாக, சூப்பர்மார்க்கெட் போன்ற இடங்களிலோ அல்லது ஆன்லைனிலோ பேக் செய்யப்பட்ட மீன்களை வாங்குகின்றனர். அப்படி வாங்கும் போது, மீனில் அதிகப்படியான திரவம் இருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் மீனின் உறைநிலை நீக்கப்பட்டு, மீண்டும் அவை உறைய வைக்கப்பட்டிருந்தால்தான் அப்படி நடக்கும். இது மீனின் தன்மை மற்றும் சுவையை பாதிக்கும் என்பதால் தவிர்ப்பதே நல்லது.

5) மீனின் செவுள்களின் நிறத்தை கவனியுங்கள். அவை நல்ல சிவப்பு நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ இருந்தால், அந்த மீன் புத்துணர்ச்சியோடு இருப்பதாக பொருள். மாறாக, பழுப்பு அல்லது சாம்பல் நிறச் செவுள்கள் இருந்தால் அந்த மீன் புத்துணர்ச்சியுடன் இல்லை என பொருள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button