இலங்கை

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை இரு கரம் கூப்பிக் கும்பிட்டும் இரக்கம் காட்டாத அநுர

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு கேட்பது என தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற சிறைக் கைதிகள் படுகொலை பொது நாள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் மார்கழி மாதம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கையர் தினம் கொண்டாடுவதற்காக தமிழரசு கட்சியை சேர்ந்த நான்கு பேரை கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகம் அழைத்திருந்தார்.

இந்தக் கலந்துரையாடல் வேறாக இருந்தாலும் ஜனாதிபதியை சந்தித்தபோது இரு கரம் கூப்பி கேட்டோம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள் அதிலும் இலங்கையர் தினத்தில் விடுதலை செய்தால் சந்தோசமடைவோம் எனவும் கூறினோம் ஆனால் நடக்கவில்லை.

வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பேசி இருக்கிறோம்.

அது மட்டுமல்லாது ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தவறாது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கிறோம் ஆனால் நிறைவேறாத ஆசையாக இருந்து வருகிறது.

தற்போது சிறையில் 10தமிழ் அரசியல் கைதிகள் இருக்கிறார்கள் அவர்களின் விபரம் அடங்கிய கோவையை குரலற்றவர்களின் குரல் அமைப்பு என்னிடமும் தந்துள்ளார்கள் என்னால் முயன்றவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியுடன் பேசி இருக்கிறேன்.

அகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் இரு கரம் கூப்பி விடுவியுங்கள் என கேட்டு விட்டேன் வேறு எவ்வாறு கேட்பது என எனக்கு தெரியவில்லை என அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button