முச்சந்தி

தண்டனைக் காலம் முடிந்தும் பல கைதிகள் சிறைகளில்; இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை மற்றும் அங்குள்ள கைதிகளின் பாதுகாப்பு குறித்து விசாரிப்பதற்காக சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுவொன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய தலைமையில் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி இரவு வெலிக்கடை சிறைச்சாலையினுள் கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அது குறித்து விசாரணை நடத்தச் சென்ற ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு சிறைச்சாலைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தை கடுமையாக மீறும் செயலாகும் என ஆணைக்குழு இங்கு வலியுறுத்தியுள்ளது.

முன்னறிவிப்பு இன்றி எந்தவொரு தடுப்புக் காவலையும் பரிசோதிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு உள்ள சட்டபூர்வ அதிகாரம் இங்கு சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அச்சமயம் சிறைச்சாலையினுள் பதற்றமான சூழ்நிலை நிலவியதாகவும், கடமையில் ஆறு அதிகாரிகள் மாத்திரமே இருந்தமையினால் ஆணைக்குழு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாமல் போனதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் காணப்பட்டதால், அந்த சந்தர்ப்பம் மிகவும் பதற்றமாக இருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்த சூழ்நிலை குறித்து ஆணைக்குழு அதிகாரிகளுக்கு முறையாக அறிவிக்கப்படாமை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் சித்திரவதைகளுக்கும் அநாகரீகமான நடத்தைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், சில கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் கூட மறுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது. அத்துடன், தமது தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button