உலகம்

கமேனியின் இறுதிச்சடங்கில் 2- வது நாளாக ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் இரண்டாவது நாளாகவும் டெஹ்ரானில் நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அலி கமேனி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல் சுமார் நான்கு மாதங்களாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

ஈரான்–அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து, தற்போது அவரது இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் கருப்பு நிற ஆடையணிந்த ஆயிரக்கணக்கானோர் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவர்களும் நிகழ்வில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கு நிகழ்வில் உரையாற்றிய மதத் தலைவரும் கவிஞருமான முகமது ரசெளலி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான கருத்துகளை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கமேனியின் மகன்கள் மசூத், மெய்சம், முஸ்தபா, ஈரான் அதிபர் மசூத் பெஷஸ்கியான், நாடாளுமன்றத் தலைவர் முகமது பாகர் கலிபாஃப் மற்றும் புரட்சிகரப் படைப் பிரிவு தளபதி அகமது வாஹிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எனினும், கமேனியின் மற்றொரு மகனும் புதிய தலைமை மதகுருவுமான அயதுல்லா மோஜ்தபா கமேனி இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த அவர் ரகசிய இடமொன்றில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கமேனியின் இறுதிச்சடங்கு நடைபெற்று வருவதால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இறுதிச்சடங்கு நிறைவடைந்த பின்னர் அவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button