இலங்கை

கேப்பாப்பிலவு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து காணிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு கிராம மக்கள், 2009 ஆம் ஆண்டு முதல் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி  12ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், 55 குடும்பங்களுக்குச் சொந்தமான மொத்தம் 159.5 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

அவற்றில் 59.5 ஏக்கர் குடியிருப்பு காணிகளும், 100 ஏக்கர் தோட்டக் காணிகளும் அடங்குகின்றன. நீண்டகாலமாக தொடரும் காணி ஆக்கிரமிப்பு தங்களது வாழ்வாதாரத்தையும் மீள்குடியேற்ற முயற்சிகளையும் கடுமையாக பாதித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் காணிகளுக்கு மேலாக, கிராம மக்களின் பயன்பாட்டிற்காக இருந்த பாடசாலை, ஆலயம், தேவாலயம் மற்றும் பொதுமண்டபம் ஆகியவற்றையும் இராணுவம் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இவ்விடங்கள் சமூக, கல்வி, மத மற்றும் கலாசார நடவடிக்கைகளுக்கான முக்கிய பொதுச் சொத்துகளாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவித்து, இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களது சொந்த கிராமங்களில் மீள்குடியேற வழிவகுக்குமாறு அரசாங்கத்திடமும் ஆளுநரிடமும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

பல ஆண்டுகளாக பல்வேறு அரசுகளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தங்களது காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டனர்.

 

தங்களது காணிகளும் பொதுச் சொத்துகளும் முழுமையாக மீள வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த மக்கள், தங்களது நீண்டகால கோரிக்கைகளுக்கு நீதியான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button