யாழ்., பல்கலைக்கழகத்தில் மரபணு ஆய்வகத்தை உருவாக்க உதவுங்கள்; மருத்துவ பீட பீடாதிபதி கோரிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மரபணு ஆய்வகத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம் என தெரிவித்த பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன், அதற்கு நீதி அமைச்சும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகமும் தேவையான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் இணைந்து செயற்பட்டு வருகின்றது. தற்போது செம்மணி மனித புதை குழியில் அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் மருத்துவ பீடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.அவற்றை அடையாளம் காணும்
நோக்கில் ஒரு மனிதவியல் ஆய்வகத்தையும், மரபணு ஆய்வகத்தையும் உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். எங்களுடைய முயற்சியின் மூலம் ஆய்வுகூடத்திற்கு தேவையான சில இயந்திரங்களையும் பெற்றுள்ளோம். ஆனால் ஆய்வுகூடத்தை முழுமையாக அமைக்க இன்னும் கூடுதல் உதவி தேவைப்படுகிறது.
எனவே, நீதி அமைச்சும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகமும் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். ஏனெனில், போதுமான வசதிகள் இல்லாமல் இத்தனை தரவுகளை பராமரிப்பதும், பகுப்பாய்வு செய்வதும், சரியான முறையில் வகைப்படுத்துவதும், அடையாளம்
காண்பதற்கான உதவிகளை வழங்குவதும் மிகவும் கடினமாக உள்ளன – என்றார்.
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகமும் இணைந்து மரபணு பரிசோதனைகளை மேற்கொள்வதற்குரிய ஆய்வுகூடங்களை நிறுவுவதற்கும் அதனை மேம்படுத்துவதற்குரிய செயற்றிட்டங்களுக்கான முன்மொழிவுகளைச் செய்து வருகின்றோம்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திடமும் ஏதேனும் முன்மொழிவுகள் இருந்தால் அதனை காணாமல்போனோருக்கான அலுவலகத்திடம் கொடுக்கலாம். உங்களுடைய முன்மொழிவுகளுக்கு நிதி உதவிகள் வழங்குவதற்கு பல நன்கொடையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் உதவுவோம்.
மனிதப் புதைகுழியில் ஆய்வு செய்வதற்குரிய சரியான தொல்லியல் நிபுணர்கள் போதியளவில் இல்லை.
எனவே நிபுணர்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். இங்கு இருக்கக்கூடிய பரிசோதனைக் கூடங்களையும் மேம்படுத்த வேண்டும். அரசாங்க பகுப்பாய்வு ஆய்வுகூடங்களினுடைய வளங்களை மேம்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை கட்டாயமாக எடுக்க வேண்டும். எதிர்காலத் திட்டமிடல்களின்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் நாங்கள் இணைந்து மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் – என்றார்.
![]()