இலங்கை

1999 இல் செம்மணியில் அகழப்பட்ட15 எலும்புக் கூடுகளுக்கும் என்ன நடந்ததெனத் தகவலில்லை

செம்மணிப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு 1999 இல் முதன்முதலாக அகழப்பட்டபோது, மீட்கப்பட்ட 15 எலும்புக் கூடுகளுக்கும் அந்த வழக்குக்கும் என்ன நடந்தது என்பது குறித்து எந்தவிதமான தகவல்களோ , ஆதாரங்களோ, ஆவணங்களோ எம்மிடமில்லை என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

செம்மணிப் புதைகுழியின் அகழ்வுப்பணிகளை பார்வையிட்ட நீதியமைச்சரிடம், ‘ செம்மணிப் புதைகுழி 1999 இல் அகழப்பட்ட போது மீட்கப்பட்ட 15 என்புக்கூடுகள் மேலதிக பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டது. சில சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது. அந்த என்புக் கூடுகளின் பரிசோதனை முடிவுகள் எங்கே? அந்த வழக்கு என்ன நிலையில் உள்ளது?’என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.அதற்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

’ நீங்கள் சொல்லும் வழக்கைப் பற்றியோ, வெளிநாட்டுக்காக அனுப்பப்பட்ட எலும்புக்கூடுகள் பற்றியோ எம்மிடம் எவ்விதமான தகவல்களோ ஆவணங்களோ தற்போது இல்லை. அதுபற்றி எதிர்வரும் நாள்களில் தீவிர கவனம் செலுத்தி அந்த என்புக்கூடுகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய முயற்சிப்போம். முன்னைய அரசாங்கங்கள் போல நாங்கள் அநீதியாகச் செயற்படமாட்டோம். செம்மணிப் புதைகுழி தொடர்பான உண்மைகளை நாங்கள் நிச்சயமாக வெளிகொண்டுவருவோம். எமது அரசாங்கம் வந்தபின்னர் எந்தவிதமான தலையீடுமின்றி, செம்மணிப் புதைகுழி அகழப்பட்டு வருகின்றது. இதில் எவ்வித ஒழிப்பு மறைப்பையும் செய்யவேண்டிய அவசியமில்லை.

அடுத்தகட்ட அகழ்வுப்பணிகள், அகழ்வின் போது மீட்கப்பட்ட என்புத்தொகுதிகள் மீதான டி.என்.ஏ. பரிசோதனை என்பவற்றுக்கான முழுமையான நிதியை விரைவில் விடுவிக்கவுள்ளோம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button