இலங்கை

மகிந்த தரப்பினரைப் பாதுகாக்கும் நோக்கம் தனக்கு கிடையாது! திலித் ஜயவீர திட்டவட்டம்

பலரைச் சிறையில் அடைப்பதன் மூலம் மட்டும் ஒரு நாடு ஒருபோதும் முன்னேற்றம் அடைய முடியாது என்றும், அதற்குப் பதிலாக முறையான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமே நாட்டுக்கு அவசியமானது என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தற்போதைய அரசானது நாட்டைக் கட்டியெழுப்பும் பிரதான வழியாக கைது நடவடிக்கைகள் மற்றும் சிறை தண்டனைகளை மட்டுமே கருதும் நிலை காணப்படுகின்றது. குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

எனினும், அதனை அரசியல் மேடைகளில் கூச்சலிட்டு முன்னிறுத்துவதன் மூலம் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், அதனால் நாட்டுக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கும் கிடைக்கும் பயன் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

நான் இங்கு எந்தவொரு தனிப்பட்ட அரசியல் நபரையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தக் கருத்துகளை முன்வைக்கவில்லை. நாட்டின் எதிர்கால வளர்ச்சியை மையமாகக் கொண்டே எனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அல்லது அவருடன் இருந்த அரசியல் தரப்பினர் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நான் பேசுவது அவர்களைப் பாதுகாப்பதற்காக அல்ல. மாறாக, இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகள் மூலம் நாட்டை திசைதிருப்பும் தற்போதைய அரசியல் அணுகுமுறைகள் சரியானதல்ல என்பதே எனது உறுதியான நிலைப்பாடு எனவே, நாட்டை முன்னேற்றுவதற்கு வெறுமனே கைது நடவடிக்கைகள் மட்டும் போதாது.

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் துறைகளில் தெளிவான, திட்டமிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே நாட்டின் உண்மையான முன்னேற்றத்துக்கு அடிப்படையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button