இலங்கை

தமிழர்கள் இனி 2 ஆம் தரப் பிரஜைகள் அல்லர்; கிளிநொச்சியில் நீதி அமைச்சர் ஹர்சன

கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அப்போதைய அரசியல்வாதிகள் உரிய முயற்சிகளை எடுத்திருந்தால், இப்பிரச்சினைக்கு எப்போதோ தீர்வு கண்டிருக்க முடியும் என நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், காணாமல் போன ஆட்களைப் பதிவு செய்யும் அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (19) காலை கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பொது அமைப்புகள், கிராம மட்ட அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்:

“யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், நாட்டில் சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை நிலைநிறுத்த முடியாமல் போயுள்ளது. கடந்த கால அரசியல்வாதிகள் உண்மையான அக்கறையுடன் முயற்சித்திருந்தால் இவற்றுக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.

ஆனால், தற்போதைய அரசாங்கம் அதற்கான காத்திரமான முயற்சிகளை எடுக்கும். தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்துவதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. அனைவரும் சமத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் நடத்தப்படுவார்கள்.”

எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) நீக்கப்பட்டு, மக்கள் நலன்சார்ந்த புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.இந்தப் புதிய சட்டமூலத்தை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம். இது பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காகவே கொண்டு வரப்படுகிறதே தவிர, தனிநபர்களையோ அல்லது வேறு தரப்பினரையோ ஒடுக்குவதற்காக அல்ல.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கள மக்களின் வாக்குகளாலேயே தாம் வெற்றி பெற்றதாகக் கூறி வந்தாரே தவிர, இந்த அலுவலகங்கள் முறையாகச் செயல்பட அனுமதிக்கவில்லை என்றும்; குறிப்பாக, வெளிநாட்டு நிறுவனங்களின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த அலுவலகங்கள் பெயரளவிற்கு ஆரம்பிக்கப்பட்டன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன் இளங்குமரன், அமைச்சின் செயலாளர் மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button