உலகம்

ஈராக் வழியாகச் செல்லும் ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்! மத்திய கிழக்கில் மேலும் பதற்றம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச் சடங்கு மற்றும் ஊர்வலம், அண்டை நாடான ஈராக் வழியாகக் கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் ஈரானில் அடக்கம் செய்யப்படும் என்று ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் குண்டுவெடிப்பில் கமேனி கொல்லப்பட்ட நிலையில், போர்ச் சூழல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த அவரது இறுதி ஊர்வலத் தேதிகள் மற்றும் வழித்தட விவரங்களை ஈரான் வெளியிட்டுள்ளது .

இமாம் ரெசா நினைவிடத்தில் முறைப்படி அடக்கம்
ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், டெஹ்ரான் மேயர் அலிரேசா ஜகானி (Alireza Zakani) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிச் சடங்கு திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கமேனிக்கான இறுதி சடங்குகள் ஜூலை 4 முதல் ஜூலை 9 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ளன. ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி மசூதியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, ஜூலை 5 அன்று தலைநகரில் பிரம்மாண்ட இறுதி ஊர்வலம் நடத்தப்படும் என்றும், இந்த ஊர்வலத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 8-ஆம் தேதி அயதுல்லா கமேனியின் உடல் அண்டை நாடான ஈராக்கிற்கு (Iraq) எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஊர்வலம் நடத்தப்படவுள்ளது. ஈராக்கில் ஷியா மக்களின் அஞ்சலிக்கு விடுக்கப்பட்ட பின், ஜூலை 9-ஆம் தேதி கமேனியின் உடல் ஈரானின் புனித நகரான மஷாத் (Mashhad) பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு அங்குள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் முறைப்படி அடக்கம் செய்யப்படவுள்ளது.

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் 86 வயதான கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் 36 ஆண்டுகால அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் அவரது மகன் மொஜ்தாபா கமேனி புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அதேவேளை ஈராக் எல்லைக்குள் கமேனியின் உடல் கடந்து செல்வது பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க கூட்டணி படைகளுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தலாம் என்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button