இலங்கை

பிரபாகரனின் மகன் கொலையை பயன்படுத்தி சலேயின் பிரச்சினையை திசை திருப்ப முயற்சி

பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டமை தொடர்பில் இப்போது கருத்து வெளியிடுபவர்கள், அவர் கொல்லப்படும் போது எங்கே இருந்தார்கள் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானா சனல் 4 ஊடகத்திற்கு வழங்கிய தகவல்களை பொய்யானது என்ற கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்திலேயே பிரபாகரனின் மகன் தொடர்பான கருத்து வெளியிடப்படுகின்றது என்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ரியாஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது ரியாஸ் பாரூக் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கதைக்கும் போது, குறித்த விடயம் தொடர்பாக கைதாகியுள்ள சுரேஷ் சலே தொடர்பில் இந்த பாராளுமன்றத்தில் ஒரு குழு அவருக்கு சார்பாக கதைத்ததுடன், இன்னுமொரு குழு எதிராகவும் மேலும் ஒரு குழு அமைதியாகவும் இருந்ததுது. இதன்போது இன்னுமொரு விடயமும் இடையில் புகுந்து சென்றது. அதாவது முஸ்லிம் சமூகத்தின் தலைவர் என்று தன்னைத் தானே கூறிக்கொண்டிருப்பவர் கருத்தொன்றை கூறியிருந்தார். அது அவருக்கு சம்பந்தப்படாத விடயமே. ஆனால் அவர் தனக்குள்ள சிறப்புரிமையின் அடிப்படையில் கதைத்தார்.

பிரபாகரனின் மகனை காப்பாற்றவில்லை என்று அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்படியென்றால் அந்த காலத்தில் அரசாங்கம் யாருடையது. எமது 159 பேரும் அப்போது இருந்தார்களா? இப்போது அது தொடர்பில் கதைப்பவர்கள் அப்போது எங்கே இருந்தார்கள். எங்கே பார்த்துக்கொண்டிருந்தனர். இவர்கள் சுரேஸ் சலேயின் பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அசாத் மௌலான சனல் 4 ஊடகத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடக்கும் நிலையில் அது தவறானது என்ற கருத்தை கொண்டு செல்வதற்காகவே இந்த விடயத்தை உள்ளே புகுத்துவதற்காகவே முயற்சிக்கின்றனர். மறைமுகமாக இதனை செய்ய முற்பட்டுள்ளார். குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்கே முயற்சிக்கின்றனர். ஆனால் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் இந்த அரசாங்கம் விசாரணைகளை நிறுத்தாது என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button