பலதும் பத்தும்

தினமும் பாதாம் சாப்பிட்டா இவ்வளவு நன்மைகளா?

அதிவேகமான வாழ்க்கை முறையில், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாதது, உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் போன்றவை உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இவற்றை தடுக்க நாம் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளில் முதன்மையாக இருப்பது, நட்ஸ். ஊட்டச்சத்துகளின் பெட்டகமான நட்ஸ்களில், மிகச்சிறந்தது பாதாம். இதில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், மெக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை வழங்கும் சிறந்த நட்ஸாக இது இருக்கிறது. அன்றாடம் நட்ஸ் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்பது பற்றி இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

1) மேம்பட்ட குடல் ஆரோக்கியம், 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பாதாம் சாப்பிட்ட பெரியவர்களுக்கு, பாதாம் சாப்பிடாதவர்களை விட அதிக பியூட்டிரேட் இருப்பது கண்டறியப்பட்டது. இது குடல் பாக்டீரியாக்கள் நன்கு செயல்படுவதைக் குறிக்கிறது. பியூட்டிரேட் என்பது, உடலால் ஜீரணிக்க முடியாத உணவு நார்ச்சத்தை குடல் நுண்ணுயிரிகள் செயலாக்கும்போது உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை கொழுப்பு அமிலமாகும்.

2) இதயப் பாதுகாப்பு, இதயத்தைப் பாதுகாக்கும் ‘நல்ல’ உயர் அடர்த்தி லிப்போபுரோட்டீன் (HDL) கொழுப்பைப் பராமரிக்கவும் அதிகரிக்கவும், ‘கெட்ட’ குறைந்த அடர்த்தி லிப்போபுரோட்டீன் (LDL) அளவைக் குறைக்கவும் பாதாம் உதவுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

பாதாமில் வைட்டமின் E போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலின் செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை சேதப்படுத்தும். இந்த சேதம் முன்கூட்டிய முதுமை மற்றும் நோய்களுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுடன் வைட்டமின் E நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வீக்கத்தைக் குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ரத்த நாளங்களை விரிவுபடுத்தவும்கூட ஆன்டிஆக்ஸிடட்கள் இவை உதவுகின்றன. மட்டுமன்றி வைட்டமின் E இது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து, சருமம் இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவும். மேலும், கூந்தல் உதிர்வைக் குறைத்து முடியை வலுவாக்கும்.

பாதாமில் உள்ள நிறைவுறா கொழுப்புகள், LDL கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன. இதுமட்டுமன்றி பாதாமில் அதிக அளவில் மெக்னீசியமும் இருக்கிறது. இது நரம்பு மற்றும் தசை செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது, இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கிறது, மேலும் எலும்புகள் வலுவாக இருக்கவும் உதவுகிறது. கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் பாதாமில் நிறைந்துள்ளன என்பதால், பாதாம் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்புத் தேய்மான நோய்கள் வராமல் தடுத்து, பற்களையும் எலும்புகளையும் பலப்படுத்தும்.

இத்துடன் பாதாம் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. அதற்கு காரணம், பாதாம் இடுப்புச் சுற்றளவு மற்றும் உங்கள் இடுப்புப் பகுதி மற்றும் உறுப்புகளைச் சுற்றி சேரும் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. பாதாம் உங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் விளைவாக, மற்ற உணவுகளைக் குறைவாகச் சாப்பிடுவதை உணரலாம். மேலும் பாதாம் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், ஓய்வில் இருக்கும்போது அதிக ஆற்றலைப் பயன்படுத்தவும் உதவும்.

பாதாமில் உள்ள எல்-கார்னைடைன் (L-carnitine) மற்றும் ரிபோஃப்ளாவின் (Riboflavin) ஆகிய ஊட்டச்சத்துக்கள் மூளைச் செல்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது அல்சைமர் போன்ற மறதி நோய்கள் வராமல் தடுக்க உதவும்.

பாதாமில் மெக்னீசியம் தாது அதிக அளவில் உள்ளதால், இன்சுலின் சுரப்பை சீராக்கும். அந்தவகையில் டைப்-2 சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க பாதாம் உதவுகிறது.

ஒருநாளில் எத்தனை பாதாம் சாப்பிடலாம்? வாழ்வியல் நோய் பாதிப்புகள் (சர்க்கரை நோய், இதய நோய் போல) இல்லாத, ஆரோக்கியமானவர்கள் ஒரு நாளைக்கு 4 முதல் 6 பாதாம் பருப்புகள் வரை சாப்பிடலாம். குளிர்காலங்களில் அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் 8 முதல் 10 பருப்புகள் வரை சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிடுவது பக்கவிளைவுகளை தரலாம் என்பதால் கவனம் தேவை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button