உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் சுரேஷ் சலே..! நீதிமன்றில் அம்பலமான தகவல்கள்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போது இவ்வாறு தெரிவித்தனர்.
தாக்குதலைத் திட்டமிட்டதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணைகளில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட சுரேஷ் சலே சார்பாக, ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்னாண்டோ மற்றும் சட்டத்தரணி அசித் சிறிவர்தன ஆகியோர் தாக்கல் செய்த மனுவின் மூலம் இந்த விஷயங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்பு முன்னிலையான வழக்கறிஞர்கள், தங்கள் கட்சிக்காரர் குற்றப் புலனாய்வுத் துறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுவரை வெளியிடப்பட்ட தடயவியல் மருத்துவ அறிக்கைகளின்படி, அவர் கடுமையான பதட்டம், மனச்சோர்வு மற்றும் அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு (PTSD) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அவர் எதிர்கொண்டதாகக் கூறப்படும் மனிதாபிமானமற்ற செயல்களே இந்த நிலைகளுக்கு முக்கிய காரணம் என்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சுட்டிகாட்டியுள்ளனர்.
இந்தக் கடுமையான மனநலப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, சுரேஷ் சலேவை குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்து உடனடியாக விடுவித்து, அவரை மற்றொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுமாறும், அவருக்குத் தேவையான மனநல மருத்துவ சிகிச்சையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வழக்கறிஞர்கள் நீதவானிடம் கோரியுள்ளனர்.
இருப்பினும், இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அரசு தலைமை வழக்கறிஞர் துறை, குற்றப் புலனாய்வுத் துறை அல்லது பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் எந்த வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்று கூறப்படுகிறது.
அதன்படி, நீதிபதி பசன் அமரசேன, முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த பின்னர், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிப்புகளை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், இந்த மனு தொடர்பாக தனது வாதங்களை முன்வைப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை (04) பிற்பகல் 2.00 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
![]()