நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமை அல்ல

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது உள்ளிட்ட புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவது, தேர்தல் வாக்குறுதியாக இருந்தபோதிலும், தற்போதைய தருணத்தில் அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம் அல்ல என்று சிரேஷ்ட அரசாங்கத் தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி , ‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ என்ற தலைப்பிலான தனது தேர்தல் தேர்தல் அறிக்கையில், தற்போதைய அரசியலமைப்பை நீக்கிவிட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தது.
இதற்கிடையில், டெய்லி மிரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள போதிலும், அது தற்போதைக்கு முன்னுரிமைக்குரிய விடயம் அல்ல என்பதை உறுதிப்படுத்தினார்.
“இது எங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் எங்களால் இதற்கு முன்னுரிமை அளிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
தற்போதைய அரசியலமைப்பு 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தன. இருப்பினும், ஆங்காங்கே செய்யப்பட்ட திருத்தங்களைத் தவிர, அது ஒருபோதும் நனவாகவில்லை.
எவ்வாறாயினும், தனது தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு, பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான இறுதிப் பரிந்துரைகளை ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்கும் என்று அமைச்சர் கூறினார்.
இந்த அளவுகோல்களை அரசாங்கம் எவ்வாறு மாற்ற உத்தேசித்துள்ளது என்று கேட்டதற்கு, “இது அனைத்தும் ஏனைய கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கருத்துக்களைப் பொறுத்தது. ஆளுங்கட்சி என்ற ரீதியில் நாங்கள் எங்கள் சொந்த முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஏனைய அனைத்து தரப்பினரின் முன்மொழிவுகளையும் ஏற்றுக்கொண்டு, பரிந்துரைகளை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த முழு செயல்முறையும் ஒரு வருடத்திற்குள் நிறைவடையும்,” என்றும் அவர் கூறினார்.
![]()