இலங்கை

காணாமல் போனோருக்கான நிதியை அரசு குறைத்ததா?; குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் அலுவலகம்

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் முற்றாக நிராகரித்துள்ளது.

அத்துடன், வருடாந்த பாதீட்டுத் திட்டம் மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, காணாமல் போனோர் தொடர்பான நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இந்த ஆண்டு 370 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்டிருந்த 10 மில்லியன் ரூபா நிதி நிறுத்தப்பட்டுள்ளதாக, ‘காணாமல் போனவர்களின் குடும்பங்கள்’ அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளையடுத்தே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கருத்துத் தெரிவிக்கையில்,

“மூலதனச் செலவுகள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்கள் பாதீட்டுத் திட்டத்தின் ஊடாகத் தனியாக வழங்கப்படுகின்றன.

அதேநேரம், இந்த 370 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடானது காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தொடர்பான செயல்பாடுகளுக்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இழப்பீட்டுத் திட்டங்களைக் கண்காணிப்பதற்காக அரசாங்கம் ஒரு தனிக்குழுவை நியமித்துள்ளதாகக் குறிப்பிட்ட தலைவர் கட்டுலந்த, “குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக் கொடுப்பனவு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் தற்காலிகக் கொடுப்பனவு மட்டுமே. தங்களது அன்புக்குரியவர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் முறையான இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிப்பதற்காகவே தற்போது இந்தத் தனிக் குழு நியமிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

2000 இற்குப் பின்னர் பதிவான 6,700 காணாமல் போன சம்பவங்கள் குறித்து காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் இதுவரை தொடர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, தற்போது 4,700 குடும்பங்கள் இந்த இடைக்காலக் கொடுப்பனவைப் பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு அரசாங்கமும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்குப் போதிய நிதியை வழங்கி, அதன் பணிகளைத் தடையின்றித் தொடர அனுமதித்துள்ளன.

அதேபோல, தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இவ்வாறான கொடுப்பனவுக் குறைப்புக்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் மகேஷ் கட்டுலந்த திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button