இலங்கை

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

வலி. வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளதாக, காணி விடுவிப்பு தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர்,     மன்னார் மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக,   கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் களப்பயணம் மேற்கொண்டு காணி விடுவிப்புத் தொடர்பான நேரடி ஆய்வுகளை முன்னெடுத்தனர்.

இந்த ஆய்வுகளின் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் காணி விடுவிப்புத் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

அக் கலந்துரையாடலில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர்கள் தமது நிலைப்பாடுகளைத் தெளிவாக முன்வைத்தனர்.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய வீதிகள், வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல இடங்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டுக் கலந்துரையாடப்பட்டது.

அவற்றில் உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது

வலிகாமம் வடக்கு பகுதியில் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளின் அவசியம் வலியுறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு அமைச்சு அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தளபதி சபையில் அறிவித்தார்.

இக் கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் , இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள் , மாவட்ட மட்ட உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button