பலதும் பத்தும்

பத்மஸ்ரீ’ விருது விழாவில் சிலம்ப ஆசானின் எளிமை

புதுச்சேரியைச் சேர்ந்த பாரம்பரிய சிலம்பக் கலைஞர் கே. பழனிவேல் (K. Pajanivel) அவர்களுக்கு, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அண்மையில் வழங்கி கௌரவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் சுவாரசியமான நெகிழ்ச்சிச் சம்பவமொன்று அரங்கேறியுள்ளது.

விருது பெறுவதற்காகத் தனது பாரம்பரிய வேட்டி, சட்டை உடையில் கம்பீரமாக நடந்து வந்த சிலம்பக் கலைஞர் பழனிவேல், மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டதும், எதிர்பாராத விதமாக அவரது காலில் விழுந்து (சாஷ்டாங்கமாக) வணங்கி ஆசி பெற்றார்.

தன் காலில் விழுந்து வணங்கிய சிலம்ப ஆசானைக் கண்டதும் சற்றும் தாமதிக்காத பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாகத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து, அவரைத் தடுத்து நிறுத்தித் கைகளைப் பிடித்துத் தூக்கிவிட்டார். பின்னர், இரு கரங்களையும் கூப்பி அவருக்குத் தனது மரியாதையான வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்தார். பிரதமரின் இந்த எளிமையான மற்றும் நெகிழ்ச்சியான செயல் அங்கிருந்த பார்வையாளர்களின் பலத்த கைதட்டல்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து மேடைக்குச் சென்ற கலைஞர் பழனிவேல் அவர்களுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்மஸ்ரீ விருதையும், அதற்கான சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார். விளையாட்டு (Sports – சிலம்பம்) துறையில் ஆற்றிய அரும்பணிக்காக அவருக்கு இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்கும் அடிமட்டக் கலைஞர்களைத் தேடிக் கண்டுபிடித்து கௌரவிக்கும் இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கும், பிரதமர் மோடியின் பண்பான செயலுக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button