உலகம்

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி உலகிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், அதனை முறையான சட்ட விதிமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் லியோ (Pope Leo) வலியுறுத்தியுள்ளார்.

தனது பதவிக்காலத்தின் முதலாவது திருத்தூது மடல் (First Encyclical) மூலமாக இந்த விசேட எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

‘மெக்னிஃபிகா ஹியூமானிடாஸ்’ (Magnifica Humanitas) அல்லது ‘மகத்தான மனிதநேயம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ மடலில், போர்க்களங்களில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குப் போப் லியோ கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

“போர்களில் மனித உயிர்களைப் பறிக்கும் அல்லது மரணத்தை விளைவிக்கும் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை, கணினி அமைப்புகளிடம் (AI Systems) ஒப்படைப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது அதற்கு அனுமதியும் அளிக்க முடியாது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் தற்போதைய வளர்ச்சி தவறான தகவல்களை (Misinformation) மிக வேகமாகப் பரப்புவதோடு, மோதல்களுக்கு முன்னுரிமை அளித்து உலகை ஒரு முடிவில்லாத போர்ப் பாதைக்கு இட்டுச் செல்லும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

எனவே, இதன் வளர்ச்சி வேகத்தை அரசாங்கங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

AI தொழில்நுட்பத்தின் தரவு உரிமைகள் (Data Ownership) முற்றிலும் தனியார் நிறுவனங்களின் கைகளில் மட்டுமே முடங்கிக் கிடப்பதை அனுமதிக்கக் கூடாது.

கொள்கை வகுப்பாளர்கள் (Policy-makers) உடனடியாக தலையிட்டு, இந்தத் தொழில்நுட்பப் புரட்சியால் தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்க வேண்டும்.

அத்துடன், குழந்தைகளை இதன் பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

சர்வதேச அளவில் முன்னணி AI தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே நிலவி வரும் தீவிரப் போட்டிகளைக் குறைக்க (Cooling of competition) நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“உலகில் அனைத்தும் மிக வேகமாக முடுக்கப்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில், அவற்றின் வேகத்தைக் குறைக்கும் வல்லமை கொண்ட மிகவும் சுறுசுறுப்பான அரசியல் தலையீடே தற்போதைய அவசரத் தேவையாகும்,” என்று போப் லியோ தனது மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், மனிதநேயத்தை முதன்மையாகக் கொண்டு இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான கட்டுப்பாட்டுச் சட்டங்களை உடனடியாக இயற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button