இலங்கை

தெற்கில் பயந்தால் வடக்கிலாவது தேர்தலை நடத்திக் காட்டுங்கள்;  அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் நாமல்

தெற்கில் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு பயம் என்றால் வட மாகாண சபைத் தேர்தலையாவது நடத்திக் காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறையில்  நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாங்கள் சவால்களுக்கு முகம் கொடுத்த கட்சியாகும். குறுகிய காலத்தில் பலமாக வந்த கட்சியாகும். பின்னர் பின்னடைவை சந்தித்தாலும் மக்களுடன் அரசியல் செய்தமையினால் அரசாங்கம் முன்னெடுக்கும் மக்களுக்கு எதிரான, அரசியல் கலாச்சாரத்திற்கு எதிரான கட்சியாக எங்களால் மீண்டும் முன்னால் வர முடிகின்றது. இந்த அரசாங்கம் பொய்களை கூறியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இளைஞர்களுக்கு பல கனவுகளை உருவாக்கினர். இப்போது அவ்வாறு நாங்கள் எதனையும் கூறவில்லை என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

அரசாங்கம் இப்போது முன்னெடுக்கும் வேலைகளால் அரச அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினரின் கௌரவங்கள் இல்லாமல் செய்யப்படுகின்றன. அண்மையில் இராணுவ வீரர்கள் நினைவிடத்தில் பூ வைக்க சென்றமைக்காக நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் பயங்கரவாதிகளை நினைவுகூர இடமளிக்கின்றனர். நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அண்மையில் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் வடக்கிற்கு சென்று மாகாண சபைகள் தேர்தலை நடத்த முடியாத என்று கூறுகின்றார். அதனை பாராளுமன்றமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுமே கூற வேண்டும். கட்சியின் செயலாளர் அதனை எவ்வாறு கூற முடியும்.

எவ்வாறாயினும் நாங்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றோம். அதாவது முதுகெலும்பு இருந்தால், மேல் மாகாண சபைத் தேர்தலையோ தென் மாகாண சபைத் தேர்தலையோ நடத்துவதற்கு பயம் என்றால் குறைந்தது வடக்கு மாகாண சபைத் தேர்தலையாவது நடத்திக் காட்டுங்கள். மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்குங்கள். மகிந்த ராஜபக்‌ஷவுக்கு பின்னர் இதுவரையில் வடக்கில் தேர்தல் நடத்தப்படவில்லை. வடக்கு மக்களின் உரிமைகள் தொடர்பில் கதைக்கின்றனர். அதன்படி வாக்குரிமையை வழங்குங்கள் என்று கேட்கின்றோம். மக்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button