உள்நாட்டுப் போரின் போது முழுமையான இராணுவ ஆதரவை எமக்கு வழங்கிய ஒரே நாடு சீனாதான்

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது ஆயுதங்களை விநியோகித்த சீன மத்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற நிறுவனங்கள், மோதல் முடிவடைந்த பின்னர் மிக விரைவாக கட்டுமான நிறுவனங்களாக மாறின என்றும், இதன் மூலம் சீனா இலங்கையின் மிக முக்கிய அபிவிருத்திப் பங்காளியாக உருவெடுக்க முடிந்தது என்றும் முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் வெளிவிவகார செயலாளருமான ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
போர்க்காலத்தில் இலங்கைக்கு மிக அதிகளவில் பாதுகாப்பு உபகரணங்களை விநியோகித்த நாடாக சீனா விளங்கியதுடன், அவசரத் தேவைகளுக்காக விரைவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் அமைக்கப்பட்டிருந்த பிணைக்கப்பட்ட களஞ்சியங்களில் (bonded warehouses) சீன ஆயுதங்களும் இராணுவ உபகரணங்களும் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச கல்வி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நட்புறவிலிருந்து தங்கியிருத்தல் வரை: சீனா மீதான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்தை பகுப்பாய்வு செய்தல்’ (From Friendship to Dependency: Analysing Sri Lanka’s Foreign Policymaking Towards China) என்ற தலைப்பிலான நூலாசிரியர் உரை மற்றும் குழு விவாதத்தின் போதே அட்மிரல் கொலம்பகே இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இலங்கையில் சீனாவின் அதிகரித்து வரும் ஈடுபாடானது, பெய்ஜிங் தனது பாரம்பரிய கடல்சார் எல்லைகளுக்கு அப்பால் தனது கவனத்தை விரிவுபடுத்துகின்ற ஒரு பரந்த பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
“சீனா நீண்ட காலமாக தென் சீனக் கடல் மற்றும் கிழக்குச் சீனக் கடல் பிராந்தியங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தது. ஆனால் 2005 முதல் 2009 வரையிலான காலப்பகுதியில், அது தனது உடனடிப் பிராந்தியத்திற்கு அப்பால், குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கியது,”.
வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் உலகின் மிக பரபரப்பான கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய புவியியல் இருப்பிடம் ஆகிய இரண்டின் காரணமாகவும், சீனாவுக்கு இலங்கை ஒரு முக்கிய ஆர்வமுள்ள புள்ளியாக மாறியது.
“உலகின் மிக பரபரப்பான கடல்சார் பாதைகளில் ஒன்றான கிழக்கு-மேற்கு கப்பல் போக்குவரத்துப் பாதை, இலங்கைக்கு தெற்கே வெறும் 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளதுடன், தினசரி சுமார் 300 கப்பல்கள் இப்பாதையை கடந்து செல்கின்றன. அந்த மூலோபாய இருப்பிடமே இலங்கையை மிக முக்கியமானதாக மாற்றியது.”
இலங்கையின் போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் சீனாவின் பங்களிப்பு 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு துரிதமடைந்தது என்றாலும், அந்தச் செயல்முறை பெரும்பாலும் பலரால் விரிவாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.
2009 மே 19 அன்று போர் முடிவடைந்ததிலிருந்து இலங்கை ஒப்பீட்டளவில் அமைதியான சூழலை அனுபவித்து வருகிறது. அதன் பின்னர் மீண்டும் ஒரு மோதலின் காரணமாக எந்தவொரு மரணமும் நிகழவில்லை.ஏனைய போருக்குப் பின்னரான நாடுகளின் சூழல்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதகமான விளைவு.
போர்க்காலத்தில் இந்தியா, அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, உக்ரைன் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்து இலங்கை உதவிகளைப் பெற்ற போதிலும், இராணுவ விநியோகங்கள் மீது சில கட்டுப்பாடுகள் இருந்ததாக அவர் கூறினார்.
“சில நாடுகள் ஆபத்தான ஆயுத விநியோகங்களுக்கு தடை விதித்து, பயிற்சி போன்ற ஆபத்தில்லாத உதவிகளை மட்டுமே வழங்கின. சில நேரங்களில் எங்களால் ஆயுதங்களை வாங்க முடிந்ததே தவிர, அவற்றுக்கான வெடிபொருட்களை வாங்க முடியவில்லை.”
2006 முதல் 2009 வரையிலான மிக முக்கியமான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள், பீரங்கிகள், மோட்டார்கள், ராடர்கள், கவச வாகனங்கள், டாங்கிகள், விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை வழங்கி, முழுமையான இராணுவ ஆதரவை வழங்கிய ஒரே நாடு சீனாதான்.
போர்க்காலத்தில் சீன பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள் இலங்கையில் கணிசமான செயல்பாட்டுப் பங்களிப்பைக் கொண்டிருந்தன. கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் பிணைக்கப்பட்ட களஞ்சியங்களை அவர்கள் கொண்டிருந்தனர். இதன் மூலம் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதங்கள் ஊடாக இராணுவத்தினர் அந்த உபகரணங்களை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
“அது ஒரு பட்டியலை எடுத்துக்கொண்டு போய், தேவையானதைச் சேகரித்து வருவது போன்றதாக இருந்தது. உங்களால் அந்த உபகரணங்களை உடனடியாகப் பெற்றுக்கொண்டு, உடனே பயன்படுத்த முடிந்தது,”.
போர் முடிவடைந்த பின்னர், இந்த சீன நிறுவனங்களில் பெரும்பாலானவை உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு மாறின என்றும், 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்தில் இலங்கையின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பங்களிப்பு செய்தன என்றும் அவர் தெரிவித்தார்.
![]()