முச்சந்தி

ட்ரம்பின் சீன விஜயம்: பொருளாதாரப் போரின் ஆதிக்கப் போட்டி சீராகுமா ?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

சீனாவை நோக்கிய ட்ரம்பின் அணுகுமுறையானது உலக பொருளாதாரப் போர், பிராந்திய ஆதிக்கப் போட்டி என்ற இரு கோணங்களிலும் உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் ட்ரம்பின் சீன விஜயம் என்பது ஒரு சாதாரண அரசியல் பயணம் அல்ல. அது உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மையத்தில் நடந்த அதிகாரப் போட்டியின் வெளிப்பாடாக தான் கருதப்பட வேண்டியுள்ளது.

ட்ரம்பின் தற்போதைய சீன விஜயம், ஈரான் மீதான போர் நிறுத்தம் இழுபறியாகியுள்ள சூழலில் நடைபெறுகிறது. சர்வதேச வர்த்தக போட்டியிலும், பேச்சுவார்த்தையிலும் உலக அரசியல் இழுபறியாகியுள்ள நிலையில் ட்ரம்ப் பெய்ஜிங் விஜயம் பல விடயங்களை கேள்விக்குறிக்கு உட்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2026 மே மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட மூன்று நாள் அரசுமுறைப் பயணம், உலக பொருளாதார மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த உயர்மட்டச் சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வர்த்தகப் போர் மற்றும் ஆதிக்கப் போட்டியைச் சீராக்குமா என்பது குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்தச் சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க – சீன வர்த்தக வாரியத்தை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறிவரும் உலக சூழலில் ட்ரம்பின் முந்தைய ஆட்சிக் காலத்தைப் போலல்லாமல், தற்போதைய சீனப் பயணம் முற்றிலும் மாறுபட்ட சூழலில் நடக்கிறது. சீனா, அமெரிக்காவுடனான வர்த்தகச் சார்பைக் குறைத்து, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவை வலுப்படுத்தியுள்ளது.

சீனா மீது நூறுவீத வரி மற்றும் வர்த்தக தண்டனைகளை அறிவித்த பிறகே ட்ரம்ப் இந்தச் சந்திப்புக்கு வந்துள்ளார். இது பேச்சுவார்த்தையில் அழுத்தம் கொடுக்கும் உத்தியாகப் பார்க்கப்படுகிறது. வர்த்தகப் போர் மட்டுமின்றி, தொழில்நுட்ப ஆதிக்கம் மற்றும் தாய்வான் போன்ற மூலோபாய விவகாரங்களும் இந்தச் சந்திப்பில் முக்கிய இடம்பெற்றுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான நம்பிக்கையின்மை உள்ளதால், இந்தச் சந்திப்பு ஒரு உண்மையான மறுசீரமைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என நிபுணர்கள் கருதுகின்றனர். சீனா, அமெரிக்க சந்தையைச் சார்ந்து இருக்கும் தன்மையைக் குறைத்து, புதிய தொழிற்சாலை தளங்களை உருவாக்கி, பொருளாதாரப் போரை எதிர்கொள்ள அதிக தயார்நிலையுடன் உள்ளது.

ட்ரம்பின் சீன விஜயம் உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்ததுள்ளது. இது சாதாரண நட்பு விஜயம் அல்ல, உலக ஆதிக்கத்திற்கான போட்டியின் அரசியல் மேடை. இந்த விஜயம் அமெரிக்கா – சீனா உறவுகளில் ஒத்துழைப்பும் மோதலும் ஒன்றாக இணைந்திருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க அரசியலில் சர்ச்சைக்கும் அதிரடிக்கும் பெயர்பெற்ற அதிபர் ட்ரம்ப், அவரது வெளிநாட்டு கொள்கைகள் பல நேரங்களில் உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்தன. குறிப்பாக தற்போதைய சீன விஜயம் பல்வேறு முரண்பாடுகள் முற்றிப்போயுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் சீனாவுடன் எத்தகைய சமரசத்தை மேற்கொள்ள முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சீனா – அமெரிக்க உறவின் பின்னணி

உலக அரசியலின் மையப் போட்டிகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இன்று சீனா–அமெரிக்க உறவு மாறியுள்ளது. ஒருபுறம் உலகின் மிகப்பெரிய பொருளாதார, ராணுவ மற்றும் தொழில்நுட்ப வல்லரசாக அமெரிக்கா திகழ்கின்றது. மறுபுறம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக சீனா உருவெடுத்துள்ளது. இந்த இரண்டு நாடுகளின் உறவு ஒத்துழைப்பும் போட்டியும் கலந்த சிக்கலான ஒன்றாகவே கடந்த நூற்றாண்டு முழுவதும் வளர்ந்து வந்துள்ளது.

தற்போது அமெரிக்கா, சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளாக விளங்குகின்றன. ஆனால் இரு நாடுகளும் வர்த்தக ரீதியாக கூட்டாளிகளாக இருப்பதற்கும் மேலாக போட்டியாளர்களாகவே பார்க்கப்படுகின்றன. தொழில்நுட்பம், வர்த்தகம், இராணுவம், செயற்கை நுண்ணறிவு, தென் சீனக் கடல், தைவான் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு மோதலை உருவாக்கி வருகின்றன.

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தபோது “அமெரிக்வே முதல்” (America First) என்ற கொள்கையை முன்னிறுத்தினார். இதன் அடிப்படை நோக்கம் அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்துவதாகும். அதற்காக சீனாவின் வர்த்தக நடைமுறைகளை அவர் கடுமையாக விமர்சித்தார். சீன பொருட்களுக்கு அதிக வரி விதித்ததும், தொழில்நுட்பத் தடைகளை ஏற்படுத்தியதும் உலக பொருளாதாரத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தின. இதற்குப் பதிலாக சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதித்தது. இதனால் உலக சந்தைகள் பதற்றமடைந்தன. பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. பல நாடுகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாதிக்கப்பட்டது. உலக பொருளாதார வளர்ச்சியிலும் மந்தநிலை உருவானது.

வர்த்தகப் போரின் தொடக்கம்

ட்ரம்பின் இந்த விஜயத்தின் பின்னர் கூட அமெரிக்கா – சீனா உறவுகள் சீராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக இன்னும் வர்த்தகப் போர் தீவிரமடையவே சாத்தியங்கள் உள்ளன. ட்ரம்ப் சீனாவை நியாயமற்ற வர்த்தக நாடு என்று குற்றம் சாட்டி வருகிறார். சீன நிறுவனங்கள் அமெரிக்க தொழில்நுட்பத்தை களவாடுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

உலக அரசியலில் தாக்கம் விளைவிக்கும் வண்ணம், ட்ரம்பின் சீன அணுகுமுறை உலக நாடுகளையும் புதிய முடிவுகளுக்கு தள்ளியது. பல நாடுகள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் சமநிலையை பேண முயன்றன. குறிப்பாக ஆசிய நாடுகள் பாதுகாப்பில் அமெரிக்காவை நம்பியபோதும், பொருளாதாரத்தில் சீனாவை நம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டி “புதிய பனிப்போர்” எனப் பல அரசியல் விமர்சகர்களால் விவரிக்கப்பட்டது. ஒரு பக்கம் அமெரிக்கா தனது உலக ஆதிக்கத்தை காக்க முயன்றது. மறுபக்கம் சீனா தனது பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சியின் மூலம் புதிய உலக மையமாக மாற முயன்றுள்ளது.

ஆரம்பகால உறவும் பனிப் போர் பகைமையும்:

19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான தொடர்புகள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டிருந்தன. சீனாவின் தேநீர், பட்டுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் அமெரிக்க சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதேவேளை மேற்கத்திய சக்திகள் சீனாவின் உள்நாட்டுச் சூழ்நிலைகளில் தலையீடு செய்த காலமாகவும் அது இருந்தது.

1949ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிஸ்ட் புரட்சி வெற்றி பெற்றபின், மாவோ சேதுங் (Mao Zedong) தலைமையில் மக்கள் சீனக் குடியரசு உருவானது. இதனால் அமெரிக்கா–சீனா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பனிப்போர் சூழலில் அமெரிக்கா, சீனாவை சோவியத் அணியின் கூட்டாளியாகக் கருதியது.

1950களில் நடைபெற்ற கொரிய போர் சீனா–அமெரிக்க உறவை மேலும் மோசமாக்கியது. வட கொரியாவுக்கு ஆதரவாக சீனா போரில் ஈடுபட்டபோது, அமெரிக்கா தென் கொரியாவுக்கு ஆதரவாக இருந்தது. இதன் பின்னர் இரு நாடுகளும் நேரடி எதிரிகளாகக் கருதப்பட்டன.

இதனுடன் தாய்வான் பிரச்சினையும் முக்கிய முரண்பாடாக மாறியது. கம்யூனிஸ்ட் ஆட்சியிலிருந்து தப்பிய தேசியவாத அரசு தைவானில் தஞ்சமடைந்தபோது, அமெரிக்கா தாய்வானுக்கு ஆதரவு வழங்கியது. இன்று வரை இந்த பிரச்சினை சீனா–அமெரிக்க உறவில் முக்கிய பதற்றக் காரணமாக உள்ளது.

1970களில் உலக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் வளர்ந்த செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்கா சீனாவுடன் உறவை மேம்படுத்த முயன்றது. 1972ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் றிச்சர்ட் நிக்சன் (Richard Nixon) சீனாவுக்கு மேற்கொண்ட வரலாற்றுப் பயணம் உலக அரசியலில் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் இரு நாடுகளும் தூதரக உறவுகளை நிறுவின. சீனா உலக பொருளாதார அமைப்பில் படிப்படியாக இணைந்தது. அமெரிக்க முதலீடுகள் சீனாவுக்குள் பெருமளவில் நுழைந்தன.

ட்ரம்பின் அரசியல் பாணி

ட்ரம்பின் சீன விஜயத்தில் மிகவும் கவனிக்கப்பட்ட அம்சம் அவரது அரசியல் பாணி. ஒரு தருணத்தில் சீனாவை கடுமையாக விமர்சித்த அவர், மற்றொரு தருணத்தில் சீன அதிபருடன் நெருக்கமான உறவை வெளிப்படுத்தினார். இது ட்ரம்பின் அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தும் அரசியல் முறையின் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்பட்டது.

அவரது அணுகுமுறை சில அமெரிக்கர்களால் பாராட்டப்பட்டது. சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை எதிர்கொள்ளத் துணிந்த தலைவர் என அவரை ஆதரவாளர்கள் புகழ்ந்தனர். ஆனால் விமர்சகர்கள், அவரது கொள்கைகள் உலக பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்ததாகவும் கூறியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு சுமூகமாக நடந்து, ட்ரம்ப் மரியாதை குறைவாக நடத்தப்படவில்லை என உணர்ந்தால், தற்போதைய பதற்றமான அமைதி நிலை தொடரும். ஆனால், இந்தச் சந்திப்பு உலகப் பொருளாதாரப் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருமா என்பது சந்தேகமே, ஏனெனில் இது ஒரு நீண்டகால ஆதிக்கப் போட்டியாகும்.டிரம்பின் இந்த பயணம், சீனா மீதான அழுத்தத்தை அதிகரிப்பதா அல்லது வர்த்தக உறவை சீரமைப்பதா என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி அமையும்

இன்றும் உலக அரசியல் அமைப்பில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான போட்டி கடுமையாக தொடர்கிறது. அந்தப் போட்டியின் முக்கிய அத்தியாயங்களில் ஒன்றாக ட்ரம்பின் சீன விஜயம் வரலாற்றில் நினைவுகூரப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button