இந்திய அரசின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தினுள் புகுந்த புத்தசாசன அமைச்சு!; அரசின் இனவாதச் செயலென கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு என கலாசார ரீதியாக எந்த ஒரு தனி அடையாளமும் இருக்கக்கூடாது என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எண்ணமே யாழ் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்துக்குள் புத்தசாசன அமைச்சு உள்வாங்கப்பட்டமைக்கு பிரதான காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டினார்.
நேற்று வியாழக்கிழமை யாழ்.தென்மராட்சி நுணாவில் பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டும் போது அது யாழ் மாநகர சபைக்கு வழங்கப்படும் என்ற உறுதி மொழியின் பிரகாரம் அமைக்கப்பட்டமை யாவரும் அறிந்தது. பின்னர் யாழ் மாநகர சபை அதன் பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்த நிலையில் இந்திய தூதரகம் தலையீடு செய்து சில காலங்களுக்கு அதனை பராமரித்து தருவதான உறுதி மொழியின் அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் கடந்த அரசாங்கம் ஒன்றில் குறித்த கலாசார மண்டபத்தின் பராமரிப்பு செலவுகளை பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்கும் அதனை தமது கண்காணிப்பின் கீழ் வழங்குமாறு கோரியது.அதற்கு தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் இந்திய தூதரகத்திற்கு விடுத்த அழுத்தத்தின் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு என நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளூர் கலாசார மண்டபத்தினை புத்த சாசன அமைச்சின் நம்பிக்கை பொறுப்பு சபைக்குள் உள்வாங்கியமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் கலாசார ரீதியான மற்றும் மத அடையாளங்களை அழிப்பதற்கும் திரிவு படுத்துவதற்கும் பிரதான காரணமாக விளங்குகின்ற புத்தசாசன அமைச்சு திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தை நம்பிக்கை பொறுப்புச் சபைக்குள் உள்வாங்கியமை திட்டமிட்ட தமிழின அழிப்பாகும்.
தமிழ் மக்கள் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் தெற்கில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றாலும் அவர்களின் ஆட்சியில் பௌத்த சிங்கள கொள்கைகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.
ஜேவிபியாக தமிழின அழிப்பில் பங்கெடுத்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கடந்த கால அரசாங்கங்களை விட மோசமான முறையில் தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகிறது.
ஆகவே யாழ்பாண திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்துக்குள் புத்த சாசன அமைச்சு உள்ளீர்க்கப்பட்டமைக்கு தமிழ் மக்களுக்கென தனியான கலாசார அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற சிந்தனையே காரணம் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.
![]()