சீன விஜயத்தில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி சீனாவுக்கான இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு (13) பீஜிங்கை சென்றடைந்துள்ளார்.
அவருடன் அமெரிக்காவின் முக்கிய தொழில் அதிபர்களும் சீனா சென்றுள்ளனர்.
ஆப்பிள், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய வர்த்தகத் தலைவர்கள் பெய்ஜிங்கைச் சென்றடைந்துள்ளனர்.
இருப்பினும், தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் மற்றும் அதன் விளைவாக விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்புகள் மற்றும் பிற வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒட்டுமொத்த வர்த்தக அளவு சமீபத்திய ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 414.7 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
இது 2022 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட அதிக அளவான 690.4 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் கணிசமான வீழ்ச்சியாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்களில் ஒன்று, இந்த வர்த்தகத்தில் நிலவும் சமநிலையற்ற தன்மையாகும்.
கடந்த ஆண்டு சீனாவிடம் இருந்து அமெரிக்கா வாங்கிய பொருட்களின் மதிப்பு, சீனாவுக்கு விற்பனை செய்ததை விட 200 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகமாகும்.
இதனைச் சரிசெய்வதற்கான ஒரு வழி, அமெரிக்கப் பொருட்களை அதிகளவில் சீனாவிற்கு விற்பனை செய்வதாகும்.
இது அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்.
இதன் மூலம் அமெரிக்காவின் சோயாபீன்ஸ் மற்றும் மாட்டிறைச்சி விவசாயிகள் மட்டுமன்றி, விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் ஆகியனவும் அதிக பயனடையக்கூடும்.
இந்த உச்சிமாநாட்டின் விளைவாக பெரிய அளவிலான புதிய விமானங்கள் கொள்வனவு செய்யப்படுவதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் என்பதில் தமக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக போயிங் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி கெல்லி ஓர்ட்பெர்க் அண்மையில் முதலீட்டாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டபோது, தான் உறுதியளித்த அனைத்துப் பொருட்களையும் பீஜிங் வாங்கவில்லை என தெரிவித்திருந்தார்.
அந்த வரலாறு மீண்டும் திரும்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
![]()