இலங்கை

மர்மமான முறையில் உயிரிழந்த கபிலவின் சத்தியக் கடதாசியில் பல உண்மைகள்!

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சமர்ப்பித்திருந்த சத்தியக் கடதாசியில் பல உண்மைகள் இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையின் நிலவும் சட்ட முறைமைக்கு அமைய, பொலிஸார் அல்லது விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் அளிக்கப்படும் வெறும் வாக்குமூலங்களுக்கு மிகக் குறைந்த அளவிலான சட்ட மதிப்பாவே உள்ளது.
ஆனால், ஒருவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் சத்தியக்கடதாசி என்பது மிகவும் சக்திவாய்ந்ததும் பாரதூரமானதுமான சாட்சியமாகும். கபில சந்திரசேன ஏற்கனவே ஒரு சத்தியக்கடதாசியைச் சமர்ப்பித்துள்ளார்.

அதில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகாரிகள் விரும்பும் வகையில் வாக்குமூலத்தை வழங்காவிட்டால், அதன் விளைவு மரணமாக அமையும் எனத் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் அந்த சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பான விசாரணையின் போது தற்கொலை செய்து கொண்ட ஒருவரை முன்னுதாரணமாகக் காட்டி, தமக்கும் அத்தகைய நிலை ஏற்படும் என அதிகாரிகள் மரண பயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பலமான சத்தியக்கடதாசியை விசாரணைக்கு உட்படுத்தாமல், அதிகாரிகளின் அழுத்தத்தினால் பெறப்பட்ட வாக்குமூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்சவை அழைப்பதன் நோக்கம் என்ன?

கடந்த காலங்களில் சேயா என்ற சிறுமியின் மரணத்தின் போது, ‘கொண்டயா’ என்பவரைப் பொலிஸார் பிடித்து அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறினார்கள். அதுவும் ஒரு வாக்குமூலமாகவே இருந்தது. ஆனால் இறுதியில் உண்மை வேறொன்றாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆகவே, விசாரணை அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பெறப்படும் வாக்குமூலங்கள் எந்தளவுக்குச் செல்லுபடியாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button