இலங்கை

60 மில்லியன் ரூபா இலஞ்சம்; விசாரணைக்கு வருமாறு மகிந்தவுக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வாக்குமூலமளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 12 ஆம் திகதி அந்த ஆணைக்குழுவினால் முன்னிலையாகுமாறு அவர்கள் இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கு அமையவே இந்த அழைப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்காக 6 எயார்பஸ் ஏ-330 ரக விமானங்களையும் மற்றும் 8ஏ -350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்யும் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அன்றைய ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக இலஞ்ச ஊழல் சட்டம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய, சந்தேக நபரான கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதன்போது, எயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் ஊடாக இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை சந்தேக நபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

அதன்படி, 2015 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, தலா 20 மில்லியன் ரூபா வீதம் மூன்று சந்தர்ப்பங்களில் மொத்தம் 60 மில்லியன் ரூபாவை பெலியத்த இல்லம் மற்றும் கார்டன் இல்லத்தில் வைத்து மகிந்த ராஜபக்ஷவிடம் வழங்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

இந்நிலையில் இது தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button