இலங்கை

அடுத்த தவணையில் ரணிலுக்கு எதிராக குற்றப் பத்திரிகை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை விரைவாக நிறைவு செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனது பாரியாரான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்தின் மூலம் அரசுக்கு ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றத்தினால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, தனது கட்சிக்காரர் சுகவீனம் காரணமாக இன்றைய தினம்(நேற்று) நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இவ்வேளையில் வழக்கு விசாரணைகளை தொடர்ந்த நீதவான், சந்தேகநபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் காணப்படின், அவர்களுக்கு எதிராக விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், அது தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், அடுத்த வழக்கு விசாரணையின் போது, விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் அறிவித்தார்.

இதன்போது நீதிமன்றத்தில் அரச தரப்பு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அடுத்த வழக்குத் தவணைக்கு முன்னதாக சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதேவேளை இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை சந்தேகநபராகப் பெயரிடுவதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் வழக்கின் மற்றொரு சந்தேகபரான முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக நீதவானால் அறிவிக்கப்பட்டது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button