இலங்கை

இறங்கி வந்தது அரசு!; பாராளுமன்ற விவாதத்திற்கு இணக்கம்

திரைசேரியின் 2.5 மில்லியன் டொலர் தவறான கணக்கிற்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவதற்கு இணங்கியுள்ளதாகவும், ஆனால் அந்த விவாதத்தை அடுத்த வாரத்தில் நடத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது என்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

5ஆம் திகதி முதல் ஆரம்பமாக பாராளுமன்ற வார அமர்வில் 2.5 மில்லியன் டொலர் விவகாரம் தொடர்பில் ஒருநாள் விவாதத்திற்கு எதிர்க்கட்சி அனுமதி கோரிய போதும், ஆளும் கட்சி அதற்கு இணக்கம் தெரிவித்திருக்கவில்லை.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள பாராளுமன்ற வாரம் மிகவும் வேலைப்பழு மிக்கதாக இருக்கும். அந்த வாரத்தில் சட்டமூலங்கள் சிலவற்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அத்துடன் 8ஆம் திகதி வியட்நாம் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். இதனால் குறித்த வாரத்தில் அந்த விவாதத்தை நடத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது.

எவ்வாறாயினும் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள பாராளுமன்ற அமர்வில் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியுமாக இருக்கும். இது தொடர்பில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவிலேயே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button