விடுதலைக் கனவை ஒரே பாடலில் உலகறிய வைத்த தேனிசை செல்லப்பா காலமானார்
April 28, 2026
0
ஈழத்தமிழர்களின் விடுதலைக் கனலை மூட்டிய புரட்சிப் பாடகர், தேனிசை செல்லப்பா இன்று(28.04.2026) காலமானார்.ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற தமிழ் பாடகராக அறியப்படும் இவர், திருநெல்வேலி மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 1941 ஏப்ரல் 21ஆம் திகதி பிறந்தார்.ஈழ விடுதலை எழுச்சி, தமிழர் தாகம், வீரத்தின் வேர்கள் போன்ற பல இசை ஆல்பங்களை அவர் வெளியிட்டுள்ளார்.இலங்கை மக்களுக்காக எழுதப்பட்ட பாடல்ஈழத் தமிழர்களின் போராட்ட உணர்வுகளை தனது குரல் மூலம் வெளிப்படுத்திய அவர், திருநெல்வேலி மாவட்டம் சிங்கிலிப்பட்டியில் நடைபெற்ற ஒரு போராட்ட மேடையில் பாடல்கச்சேரி நடத்த சி.பா. ஆதித்தனார் விரும்பினார்.அந்த நிகழ்ச்சிக்காக மற்ற பாடகர்கள் யாரும் வராத நிலையில், தேனிசை செல்லப்பா மட்டும் கலந்து கொண்டதால் அவர் மேடையேற்றப்பட்டார். அவரது பாடல்கள் சி.பா. ஆதித்தனாருக்கு மிகவும் பிடித்ததால், அவரை தனது அரசியல் பிரசாரத்திற்காக நியமித்து கட்சி அலுவலகத்திலேயே தங்கவைத்தார். அங்கிருந்தபடியே கட்சி மேடைகளிலும், திராவிடர் கழக மேடைகளிலும் செல்லப்பா பாடிக் கொண்டிருந்தார்.அந்த காலகட்டத்தில், இலங்கையில் 1964 அக்டோபர் 30ஆம் திகதி ஏற்பட்ட சிறிமாவோ பண்டாரா நாயக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில், மலையக மக்களை வெளியேற்றும் நடவடிக்கையாக சுமார் ஐந்து லட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்.அந்தச் சூழ்நிலையை முன்னிட்டு, ஏ.எல். நாராயணன் எழுத்தில் தேனிசை செல்லப்பா குரலில் வெளியான பாடல் மக்களால் அதிகம் பேசப்பட்டது.மலையக மக்களின் குரல்அவர் பாடிய பாடல்களும், திராவிட இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த செல்லப்பாவின் குரலும் பாவமும் பலரை கவர்ந்தன. அவற்றில் ஒருவர் பேபி சுப்பிரமணியம். அவர், ஈழத்திலிருந்து வந்து சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் மூலமாக, செல்லப்பாவை ஈழப் புரட்சிப் பாடல்களைப் பாடச் செய்தார்.1990ஆம் ஆண்டு அவர் ஈழத்திற்கு அழைக்கப்பட்டார். யாழ்கோட்டை மைதானத்தில் ஐந்து லட்சம் மக்கள் முன்னிலையில் அவரது கச்சேரி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு உட்பட எட்டு மாவட்டங்களில் அவரது கச்சேரிகள் சிறப்பாக நடைபெற்றன. கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பல கவிஞர்கள் எழுதிய பாடல்களை அவர் பாடியுள்ளார்.