சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!… விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!… தொடர் – 03….. சங்கர சுப்பிரமணியன்


தென் சீனாவில் குவாங்டங் மாநிலத்தின் தலைநகரான மிகப் பெரிய நகரம் குவாங்சௌ. குவாங்சௌவை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது சீனா சதர்ன் விமானச்சேவை.
நான் கடந்த முறை சீனா சென்றிருந்தபோது பார்த்த சீனாவின் தலைநகரான பீஜிங்கின் மற்றொரு விமான நிலையமான டாக்ஸிங் பன்னாட்டு விமான நிலையத்தைப் போன்றே குவாங்சௌ விமான நிலையமும் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது. அதன் பிரமிப்பை கண்டு களிக்கும் விதமாக அங்கு தங்கவேண்டி இருந்த நான்கரை மணி நேரம் எனக்கு உதவியது.
அடுத்ததாக மொழிப் பிரச்சனை. மேலும் டிரான்சிட் என்று சொல்லப்படும் பயணத்தில் கடந்து போகும் இடம். குவாங்சௌ பையுன் பன்னாட்டு விமான நிலையம் பிரம்மாண்டமாக இருந்தாலும் பெரும்பாலான பயணிகள் டிரான்ஸிட்டுக்காக சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தைத்தான் தேர்வு செய்கிறார்கள். இவை போன்ற காரணங்கள் உள்ளன.
விமான நிலையத்திலேயே தாமதித்த போதும் திரும்பவும் ஜப்பான் செல்ல சீனா சதர்ன் விமானத்தில் ஏறுமுன் கடுமையான சோதனைக்கு பயணிகள் உள்ளாக்கப் பட்டனர். ஒருவழியாக ஜப்பான் செல்ல விமானத்தில் அமர்ந்தோம். சரியாக சீன நேரப்படி காலை 10.30 மணியளவில் விமானம் ஓடுபாதையில் ஓட ஆரம்பித்தது. இந்த விமானமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தைப் போன்று நன்றாகவே இருந்தது.முதலில் வந்த விமானத்தைப் போன்று இந்த விமானத்தில் விளம்பரங்கள் ஏதும் இல்லை. இந்த விமானத்தில் வழங்கப்பட்ட உணவும் நன்றாகவே இருந்தது. சுமார் நான்கரை நேரப் பயணத்திற்கு பின் மாலை 3.00 மணயளவில் ஜப்பான் ஓஸாகா கன்சாய் பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. விமானத்தில் இருந்து இறங்கி பொதிகளைப் பெற்றபின் விமான நிலயத்தைவிட்டு வெளியேறும் முன் செய்யவேண்டிய பணிகள் இருந்தன.
ஏற்பாடு செய்திருந்ததால் விமாநிலையம் சென்றதும் அங்கு சிம்கார்டை பெற்றுக் கொண்டேன். சகூரா மொபைல் சென்டரில் இந்தியப் பெண் ஒருவர் இருந்தார். நான் இந்திய வம்சாவழி என்பதை தெரிந்து கொண்டு அங்கிருந்த கூட்டத்தில் தனிப்பட்ட அக்கறை காட்டியதால் வேலை எளிதானது.
அடுத்ததாக பணம் செலவு செய்வதற்காக முன்பணம் கட்டும் IC கார்டு ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும். நான் ICOCA கார்டு என்ற ஒன்றை விமான நிலையத்தில் இருந்த இயந்திரத்திலேயே பெற்றேன்.
மெல்பனில் இருந்து செல்லும்போதே ஜப்பான் யென்னும் எடுத்துச் சென்றிருந்ததால் இருபதாயியரம் யென் வரை பணத்தை முன்பணமாக இயந்திரத்தில் செலுத்தி ICOCA கார்டைப் பெற்றுக்கொண்டேன்.இந்த கார்டைப் பயன்படுத்தும்முன் ஜப்பான் போக்குவரத்து பற்றி சொல்லியே ஆகவேண்டும். முதலாவதாக ஷின்கன்சன்(புல்லட் ட்ரெயின்), JR லைன்ஸ், தனியார் ரயில்வே மற்றும் சப்வே சிஸ்டம்ஸ் என்று பல ரயில்கள் ஓடுகின்றன.
இது தவிர பேருந்து, பதினேழு பதினொன்பது நகரங்களில் ஓடக்கூடிய ஸ்ட்ரீட் கார்ஸ் என்று சொல்லப்படும் ட்ராம்கள் மற்றும் வாடகை வாகனங்கள் என்பவை ஜப்பானின் நெரிசலான போக்கு வரத்துக்கு மிகவும் உதவுகின்றன. இவை அனைத்திலும் புல்லட் ட்ரெயினைத் தவிர இந்த ICOCA கார்டைப் பயன்படுத்தலாம்.
நான் ஒசாகாவில் இருந்து டோக்யோ போய்வரவும் மற்றும் ஒசாகாவில் இருந்து ஹிரோஷிமா சென்றுவரவும் புல்லட் ட்ரெயினில் முன்பதிவை ஆன்லைன் மூலம் செய்திருந்ததால் புல்லட் ட்ரெயினில் கார்டை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. ஆனால் ஒசாகவில் இருந்து கியாடோ செல்லவும் அங்கிருந்து நாரா என்ற இடத்துக்கு செல்ல JR லைன்ஸிலும் பின் நாராவிலிருந்து லோகல் லைனில் இனாரி செல்லவும் ICOCA கார்டு பயன்பட்டது.
இது தவிர உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், நுழைவுச் சீட்டு வாங்கவேண்டிய இடங்கள் என்று பணம் தேவைப்படும் இடங்களில் எல்லாம் இந்த கார்டு மிகவும் வசதியாக இருந்தது. இதைத்தவிர கார்டில் பணத்தை டாப் அப் செய்யவும் வசதி எல்லா செவன் லெவன் கடைகளிலும் இருந்தன. செவன் லெவன் கடைகளில் அவர்களது ATM களில் பன்னாட்டு கார்டுகளைப் பயன்படுத்தியும் பணம் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் லாசன், பேமிலி மார்ட், 7-Bank ATMs,
சரங்கப்பாதை ரயில் நிலையங்கள், கன்வீனியன்ட் ஸ்டோர்ஸ், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் டாப் அப் செய்யலாம். அத்தனை வசதிகள் உள்ளன. இதுபோல் ஒவ்வொரு கார்டுக்கும் சில சலுகைகள் உள்ளன.
கியோட்டோ மற்றும் ஹிரோசிமா போன்ற நகரங்களுக்கு போய்வர வசதியாக மையப் பகுதியில் அமைந்திருக்கிறது. ICOCA கார்டில் போட்ட பணம் செலவு செய்தபின்னும் அதிகமிருந்தால் அப்பணத்தை ஒசாக விமான நிலயத்தை விட்டு செல்லும்போது பெற்றுக் கொள்ளலாம். இந்த கார்டை பயன் படுத்துவதால் கிடைக்கும் நன்மை இது.இனிமேல் என் பயணத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சீனா சதர்ன் விமானம் மாலை மூன்று மணியளவில் ஒசாகா கன்சாய் பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியது. நாங்கள் தங்கவேண்டிய தய்வா ராய்னட் ஓட்டல் சாகாய்சூஸி ஹொன்மாச்சி பிரிமியர் செல்ல முன்கூட்டியே ஆன்லைனில் ஏர்ப்போர்ட பிக்கப்புக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

(தொடரும்….)
![]()