இலங்கை

மட்டக்களப்பில் அதிரும் கொலைச் சம்பவங்கள்; 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

களுவாஞ்சிக்குடி, சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய காசிநாதன் ஜெயகாந்த் என்ற விவசாயி,  தனது மிளகாய் தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இனம் தெரியாத நபர்களால் அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 13-ம் திகதி விளாவெட்டுவான் நாவற்குடா பகுதியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றில், உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது.

19 வயது இளைஞன் ஒருவன் தாக்கியதில் படுகாயமடைந்த 35 வயதுடைய தங்கத்துரை ரவீந்திரா என்பவர், சிகிச்சை பலனின்றி (18) உயிரிழந்தார்.

இது தொடர்பாகச் சந்தேகநபரான இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்திவெளி, சித்தாண்டி பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (17) மதுபானம் குடிப்பதற்கு 1000 ரூபாய் பணம் தர மறுத்த காரணத்திற்காக, தனது தாயை (42 வயது) அடித்துக் கொலை செய்த 20 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஏறாவூர், சிவபுரம் பகுதியில் கடந்த 7-ம் திகதி மகளைக் கண்டித்த தந்தையை, அவரது இரண்டாவது மகனே பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய மாரிமுத்து ரவிச்சந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை (17) உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் மூன்றாவது மகன் கடந்த ‘டித்வா’ புயல் காலத்தில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொலையல்லாத மற்றுமொரு சம்பவமாக, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு மகாஓயா, சூரியடி பகுதியில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த ரயிலில் மோதி, விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சதுன் பண்டார என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களுக்கு மட்டக்களப்பு பொலிஸ் தடயவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் நேரில் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிகரித்துவரும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *