இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டு பணி – விகாராதிபதி பொலிஸில் முறைப்பாடு!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை (17) அளவீடு செய்வது எனவும் , அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11 ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரி இருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்று காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில்  (16) தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர், விகாரை காணியினை சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயல்வதாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், (17) காலை பலாலி பொலிஸார் விகாரை அமைந்துள்ள பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை தமது காணிகளை அடையாளம் காட்ட என காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு வந்துள்ளனர்.

இருந்த போதிலும், காலை 09.30 மணி வரையில், காணி அளவீட்டு பணிகளுக்கு காணிகளை அடையாளம் காட்ட வருமாறு காணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கடற்தொழில் அமைச்சர், மாவட்ட செயலர், தெல்லிப்பளை பிரதேச செயலர் உள்ளிட்ட எவரும் அவ்விடத்திற்கு வருகை தராத நிலையில், காணி உரிமையாளர்கள் மத்தியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

அதேவேளை, காணி அளவீட்டு பணிகள் தொடர்பில் புத்த சாசன அமைச்சோ, மாவட்ட செயலரோ தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் எதனையும் வழங்கவில்லை. உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இல்லாமல், விகாரை காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது என விகாராதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *