உலகம்

மெமோரியல் அமைப்பை முடக்க ரஷ்யா முயற்சி; நோபல் குழு கடும் கண்டனம்

2022ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ரஷ்யாவின் முன்னணி மனித உரிமைகள் அமைப்பான ‘மெமோரியல்’ நிறுவனத்தை, “தீவிரவாத அமைப்பு” என அறிவிக்க ரஷ்ய அதிகாரிகள் எடுத்து வரும் முயற்சிகள் ஆழ்ந்த கவலையளிப்பதாக நோர்வே நோபல் குழு தெரிவித்துள்ளது.

மெமோரியல் அமைப்பை ‘விரும்பத்தகாத அமைப்பு’ (Undesirable entity) மற்றும் ‘தீவிரவாத அமைப்பு’ எனப் பட்டியலிட ரஷ்ய நீதி அமைச்சு அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதன் மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மனு ஏற்கப்பட்டால், அந்த அமைப்போடு தொடர்புடையவர்கள் அல்லது அதன் தகவல்களைப் பகிர்பவர்கள் கூட 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதங்களைச் சந்திக்க நேரிடும்.

1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெமோரியல் அமைப்பு, ரஷ்யாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

இந்தநிலையில், 2021 ஆம் ஆண்டிலேயே இந்த அமைப்பைக் கலைக்க ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதேவேளை, நோர்வே நோபல் குழுவின் தலைவர் ஜோர்கன் வாட்னே பிரைட்னஸ் (Jorgen Watne Frydnes) வெளியிட்ட அறிக்கையில், “இந்த நடவடிக்கை மனித கண்ணியம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரானது.

மெமோரியல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் மற்றும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளை ஒடுக்குவதன் மூலம், நாட்டில் மாற்றுக்கருத்துக்களே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இத்தகைய ‘தீவிரவாத’ முத்திரை குத்தப்படுவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *