அர்ச்சுனாவுக்கு அழைப்பாணை; யாழ். நீதிமன்றம் உத்தரவு

தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு வைத்தியரை அவதூறுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தன்னைத் தொந்தரவு செய்யும் வகையிலும், அவதூறுகளைப் பரப்பும் நோக்கிலும் செய்திகளையும், பரப்புரைகளையும் மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலே தெல்லிப்பழைப் புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் இன்னும் சில தரப்புகளுக்கும் எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மற்றொரு வைத்தியர், தனியார் ஊடகம், வலையொளி தளங்கள் உள்ளிட்ட சில தரப்புகளுக்கு எதிராகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதிவான் உசைன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முதலாம் தரப்பான வைத்தியர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் ஆஜரான போதும் இரண்டாம் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் எவரும் ஆஜராகாத நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் முதலாம் தரப்பு வைத்தியர் மற்றும் இரண்டாம் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரை சட்டத்தரணிகள் ஊடாக ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா ஆகியோர் ஆஜராகினார்.
![]()