இலங்கை

பிரபாகரனின் காணியில் நூலகம் பயங்கரவாத தடை சட்டம் பாய்கிறது;  விசாரணைகளுக்கு பருத்தித்துறை நீதிமன்று அனுமதி

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக காணியில் நூலகமொன்றை அமைக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள புலிகளின் தலைவரின் பூர்வீக காணியில் நூலகம் ஒன்றினை நிர்மாணிக்க , அவரது சகோதரி வல்வெட்டித்துறையை சேர்ந்த அனந்தராஜ் என்பவருக்கு அற்றோணி தத்துவம் வழங்கியுள்ளார்.

அதன் அடிப்படையில் காணியில் கட்டுமானங்களை மேற்கொள்ள வல்வெட்டித்துறை நகர சபையில் அதற்கான அனுமதிகளை பெறும் நடவடிக்கைகளை கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உருவங்கள் , ஓவியங்கள் , பதாகைகள் , வரலாற்று சின்னங்கள் , புலிகளின் தலைவரின் சிலை உள்ளிட்டவை காட்சிப்படுத்த உள்ளனர் எனவும் அதனூடாக விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சி எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அத்துடன் இத் திட்டத்தை இலங்கையில் அனந்தராஜ் என்பவர் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் , அதற்காக அவருக்கு முதல் கட்டமாக 16 இலட்ச ரூபா நிதி வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த பண பரிமாற்றம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க மன்றில் அனுமதி கோரிய நிலையில் , அதற்கான அனுமதியினை மன்று வழங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *