இலங்கை

திருகோணமலை எண்ணெய் குதங்களை துரிதமாகப் புனரமைக்க தீர்மானம்

இலங்கையின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து ‘த இந்து’ நாளிதழுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளார்.

திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி மையமாக மாற்றுவதன் மூலம், நாட்டின் எரிபொருள் விநியோகச் சவால்களுக்கு நிரந்தர தீர்வை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2025 ஏப்ரலில் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முன்னர் இத்திட்டத்தில் இந்தியத் தலையீட்டைத் தேசிய மக்கள் சக்தி எதிர்த்து வந்த போதிலும், தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் விநியோகப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இந்த விவகாரத்தில் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது எரிசக்தி அமைச்சினால் இதற்கான தொழில்நுட்ப அம்சங்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருவதுடன், விரைவில் கேள்விப்பத்திரங்கள் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *