உலகம்

டியாகோ கார்சியா மீதான தாக்குதல் முயற்சி ; பிரித்தானியா கடும் கண்டனம்

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத்தளம் மீது ஈரான் மேற்கொண்ட “பொறுப்பற்ற தாக்குதல்” முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இந்தத் தளத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஏவுகணைகள் தளத்திற்கு எவ்வளவு அருகில் வந்தன என்பது குறித்த விரிவான தகவல்களை பிரித்தானிய அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு, “பிராந்தியம் முழுவதும் ஈரான் முன்னெடுக்கும் ஆக்ரோஷமான தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணையை முடக்கி வைத்துள்ளமையும் பிரித்தானியாவின் நலன்களுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய நேரடித் தாக்குதல்களில் பிரித்தானியா பங்கேற்கவில்லை.

எனினும், உலக எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமைந்துள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த, அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களுக்கு பிரித்தானியா தனது தளங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதேவேளை, இந்தத் தாக்குதல் முயற்சி, டியாகோ கார்சியா தளத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய முக்கியத்துவத்தை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.

முன்னதாக, டியாகோ கார்சியா தீவின் இறையாண்மையை மொரிஷியஸிடம் (Mauritius) ஒப்படைக்க வேண்டாம் என்று டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தத் தளம் கைமாறினால், அது பிராந்தியத்தில் சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும், மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு நலன்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போதைய ஈரான் தாக்குதல் முயற்சி, ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த அந்தப் பாதுகாப்பு ரீதியான கவலைகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *