உடையார்கட்டு மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக பூட்டு; நோயாளர்கள் பெரும் சிரமம்

உடையார்கட்டு மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை சேவைகள் வெள்ளிக்கிழமை(20) தற்காலிகமாக மூடப்பட்டமையால் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற முதியவர்கள், பாடசாலை மாணவர்கள், கிளினிக்கிற்காக வந்த நோயாளர்கள் என பலரும் பெரிம் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.
உடையார்கட்டு – மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலைக்கு வியாழன் மாலை சென்ற ஒருவருக்கும் காவலாளிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதனை தொடர்ந்து வைத்தியசாலை காவலாளியை அவர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து வைத்தியசாலை பிரதான வாயில் மூடப்பட்டு வெள்ளிக்கிழமை மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையின் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை என்பதால் கிராம நோயாளர்கள், மாதாந்த கிளினிக் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள், சிகிச்சை பெற வந்த பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டனர்.
இது குறித்து வைத்தியசாலை முன்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில், காய்ச்சல் காரணமாக வருகை தந்த வயோதிபர்கள், மாதாந்த கிளினிக்கிற்காக பலரும் வந்திருக்கிறார்கள் குளுசை அனைத்தும் முடிந்துவிட்டதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலை. பின்தங்கிய கிராமமாக இருப்பதனால் இந்த வைத்தியசாலையை விட்டால் பல கிலோமீற்றர்கள் கடந்தே சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை. ஒன்று இரண்டு நபர்களின் செயற்பாட்டால் நோயாளர்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர். வைத்தியசாலையை பூட்டுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சின்ன விடயத்திற்கெல்லாம் வைத்தியசாலையை பூட்டாமல் நோயாளர்களின் நலன் கருதி வைத்தியசாலை செயற்பாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ் விடயம் குறித்து முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.உமாசங்கர் கூறுகையில்,
இவ் விடயம் தொடர்பில் மாகாண பணிப்பாளருடன், மேல்மட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடியதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (20) வைத்தியசாலை செயற்பாடுகள் நிறுத்தப்பட், வைத்தியசாலையில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுபவரை கைது செய்தால் நாளையதினம்(சனிக்கிழமை)வைத்தியசாலை செயற்பாடுகள் இடம்பெறும் என்பதுடன் இனிமேல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
![]()