யாழ்., பல்கலைக்கழகத்தின் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் மற்றும் பல்துறைக் கற்கைகள் ஆகிய துறைகளின் தலைவர்கள் உட்பட மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 14) காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், பின்வரும் மூவரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை நேற்று ஒப்புதல் வழங்கியது:
- கலாநிதி ஜசோதா பிரபாகர் – விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவர் (இரசாயனவியலில் பேராசிரியர்).
- கலாநிதி பத்மநாதன் கதிர்காமநாதன் – பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவர் (பொறியியற் கணிதவியலில் பேராசிரியர்).
- கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் – கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் (ஆங்கில மொழி கற்பித்தலில் பேராசிரியர்).
பல்கலைக்கழகத்தின் கல்விசார் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் தகுதி அடிப்படையிலான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()